சச்சினை வீழ்த்தியதை மறக்க முடியாது: சாவ்லா!!

294

chavla

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் விக்கெட்டை கைப்பற்றியது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்று இந்திய சுழற்பந்துவீச்சாளர் பியுஸ் சாவ்லா தெரிவித்தார்.

இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளரான பியுஸ் சாவ்லா கடந்த 2005-06ல் நடந்த சாலஞ்சர் கிண்ண தொடரில் இந்திய பி அணிக்காக விளையாடினார்.

இத்தொடரில் இறுதிச்சுற்றில் சுழலில் அசத்திய இவர் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், யுவராஜ் சிங், அணித்தலைவர் டோனி ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றி தேசிய அணி தேர்வாளர்களை தன் மீது திசை திருப்பினார்.

இதனையடுத்து இவர் மார்ச் 2006ல் நாக்பூரில் நடந்த இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டிக்கு முதன்முதலில் தெரிவு செய்யப்பட்டார்.

24 வயதான இவர் இதுவரை 3 டெஸ்ட் (7 விக்கெட்), 25 ஒருநாள் (32 விக்கெட்), 7 சர்வதேச T20 (4 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ள இவர் சமீபகாலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

இது குறித்து பியுஸ் சாவ்லா கூறுகையில், கடந்த 2005-06ல் நடந்த சேலஞ்சர் கிண்ண தொடரில் இந்திய பி அணிக்காக விளையாடிய போது எனக்கு 16 வயது. இத்தொடரில் சர்வதேச பந்துவீச்சாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கெதிராக பந்துவீசும் வாய்ப்பு கிடைத்தது.

சர்வதேச அளவில் எதிரணி பந்துவீச்சாளர்களை திணறடித்த இவர் எனது பந்தை எங்கே விட்டுவைக்கப் போகிறார் என்று எண்ணினேன்.

இருப்பினும் இவரது விக்கெட்டை கைப்பற்ற வேண்டும் என்று நினைத்தேன். அது போல சச்சினின் விக்கெட்டை வீழ்த்தினேன். இந்த தருணம், என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது. போட்டி முடிந்த பின், நன்றாக பந்து வீசினீர்கள் என்று சச்சின் என்னை பாராட்டினார்.

இதுவரை மூன்று டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. விரைவில் இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவேன். இதற்காக கடின பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி போட்டியில் சமர்சட் அணிக்காக விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இப்போட்டியில் என்னால் முடிந்தவரை முழுத்திறமையை வெளிப்படுத்தி துல்லியமாக பந்துவீச முயற்சிப்பேன் என்றும் முன்னதாக சசக்ஸ் அணிக்காக விளையாடியது ஊக்கம் அளித்தது எனவும் கூறினார்.