ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் தன்னால் திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனமைக்கு போதிய சர்வதேச அனுபவமின்மையே காரணம் என இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் சுமேத ஜகத் ரணசிங்க தெரிவித்தார்.
36 வீரர்கள் இரண்டு குழுக்களாக போட்டியிட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 71.93 மீறறர் தூரம் எறிந்த சுமேத ரணசிங்க ஒட்டுமொத்த நிலையில் கடைசி இடத்தைப் பெற்றார்.
கடந்த வருட பிற்பகுதியில் நடைபெற்ற தெற்காசிய திறன்காண் போட்டியில் 83.04 மீற்றர் தூரம் ஈட்டியை எறிந்து தேசிய சாதனையை நிலைநாட்டியிருந்தார்.
ஆனால் ஒலிம்பிக்கில் அவரது ஆற்றல் ஏறத்தாழ 12 மீற்றர் குறைந்திருந்தது.
ஆற்றல் குறைந்ததற்கு காரணம் என்னவென ஒலிம்பிக் வீரர்கள் கிராமத்தில் சுமேதவிடம் வினவியபோது,
தெற்காசிய போட்டியில் கலந்து கொண்ட சில மாதங்களில் ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றிய எனக்கு போதிய அனுபவம் இல்லை. மேலும் இத்தகைய உயரிய போட்டியில் பங்குபற்றியபோது என்னில் ஒரு பதற்றம் நிலவியது.
இதன் காரணமாக என்னால் ஆற்றலை வெளிப்படுத்த முடியாமல் போனது. ஆனால் இவ் விளையாட்டில் ஈடுபடத் தொடங்கி குறுகிய காலத்தில் ஒலிம்பிக் தேர்ச்சி மட்டத்தை அடைந்ததையிட்டு திருப்தி அடைகின்றேன்’’ என்றார்.
எதிர்காலத் திட்டம் என்னவென அவரிடம் கேட்டதற்கு, ‘‘எதிர்காலத்தில் பட்டப் படிப்பில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன். இதனிடையே ஈட்டி எறிதலுக்கான பயிற்சியில் ஈடுபடுவேன். ஆசிய விளையாட்டு விழா, பொதுநலவாய விளையாட்டு விழா ஆகிய போட்டிகளை இலக்காகக் கொண்டு பயிற்சிகளில் ஈடுபடவுள்ளேன்’’ என பதிலளித்தார்.
இதேவேளை, சுமேத போன்ற வீரர்களுக்கு பிரதான சர்வதேச மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்ற வாய்ப்பு வழங்குவது மிக அவசியம் எனவும் அதன் மூலமே ஆற்றல் அதிகரிக்கும் எனவும் பயிற்றுநர் பிரதீப் நிஷான்த தெரிவித்தார்.






