ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து உள்ளிட்ட நால்வர் இந்தியாவின் உயரிய விளையாட்டுத் துறை விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பெட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் மற்றும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர், துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஜிது ராய் ஆகியோர் கேல் ரத்னா விருது பெறவுள்ளனர்.
ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியரான தீபா கர்மாகர் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை இழந்தார். துப்பாக்கிச் சுடுதல் வீரரான ஜிது ராய், ஒலிம்பிக்கில் இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்தார்.
தீபா கர்மாகரின் பயிற்சியாளர் விஸ்வேஷ்வர் நந்தி, விராட் கோலியின் தனிப் பயிற்சியாளரும், ஆலோசகருமான ராஜ்குமார் சர்மா உள்ளிட்ட 6 பேர் சிறந்த பயிற்சியாளருக்கு வழங்கப்படும் துரோணாசார்யா விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கேல் ரத்னா விருதுடன் பட்டயம் மற்றும் 7.5 இலட்சம் ரொக்கப் பரிசும், அர்ஜுனா, துரோணாச்சார்யா, தியான் சந்த் விருதுகளை பெறுபவர்களுக்கு சான்றிதழுடன் 5 இலட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, விருதுகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






