பேராதனை பல்கலைகழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீட முதலாம் வருட தமிழ் மற்றும் முஸ்லீம் மாணவர்கள் மீது பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பல்கலைகழக நிகழ்வொன்றுக்காக குறிஞ்சிக்குமரன் கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் நேற்றிரவு 7.45 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 20 பேர் கொண்ட குழுவினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தலைக்கவசம், தடிகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காயமடைந்த நான்கு மாணவர்கள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய மாணவர்களுக்கும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்காத காரணத்தாலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பினர் கூறியுள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கனிஷ்ட தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதல்கள் இதற்கு முன்னரும் இடம்பெற்ற போதிலும் அது குறித்த தகவல்கள் பெரிதாக வெளியில் வெளிவருவதில்லை என பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறியுள்ளனர்.






