
இந்தோனேசியாவில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுக் கூட்டங்கள் இருக்கின்றன. இந்த தீவு கூட்டங்களுக்கு படகு போக்குவரத்துதான் முக்கிய காரணியாக இருக்கிறது. இன்று சுமத்திரா தீவியின் கிழக்கு மாகாணமான ரியாயுவின் துறைமுக நகரமான டான்ஜங் பினாங் பகுதியில் இருந்து 17 பேரை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த படகு மோசமான வானிலைக் காரணமாக திடீரென கடலில் மூழ்கியது.
இந்த விபத்து அறிந்த கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் விபத்துக்குள்ளான படகில் இருந்து தண்ணீரில் விழுந்த 17 பேரில் 12 பேரை மீட்டனர். இதில் 10 பேர் ஏற்கனவே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். மாயமான ஐந்து பேரை கடற்படை வீரர்கள் தீவிரமாக தேடி வருகிறார்கள். கடந்த டிசம்பர் மாதம் சுலாவேசி மாகாணத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





