கனடா நாட்டில் உயிரிழந்த தாயாரின் சாம்பலை எடுத்துக்கொண்டு மரத்தான் போட்டியில் பங்கேற்று மகள் வெற்றி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எட்மோண்டன் நகரில் ரிபேக்கா செல்மிக் என்ற பெண் தனது 65 வயதான தாயாருடன் வசித்து வந்துள்ளார். கல்லீரல் நோயால் தாய் அவதியுற்று வந்தாலும் கூட தனது மகள் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என அவர் ஊக்கம் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் உடல்நிலை மோசம் அடைந்ததும் தாயார் உயிரிழந்தார்.
தாயாரின் உடலை உறவினர்கள் தீயிட்டு எரித்ததும் ரிபேக்கா தாயாரின் சாம்பலை(அஸ்த்தி) எடுத்து பத்திரமாக வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமை அன்று எட்மோண்ட் நகரில் மரத்தான் போட்டி தொடங்கியுள்ளது. 21 கி.மீ கடக்க வேண்டிய இந்த போட்டியில் ரிபேக்காவும் பங்கேற்றுள்ளார்.
இதுமட்டுமில்லாமல், தனது தாயாரின் சாம்பலை தன்னுடன் கொண்டு சென்ற ரிபேக்கா எல்லைக்கோட்டை அடையும் வரை அதனை தனது இதயத்திற்கு அருகிலேயே வைத்துக்கொண்டு ஓடி வெற்றி பெற்றுள்ளார்.
இது குறித்து தெரிவித்த ரிபேக்கா..
“நான் சாதிக்க வேண்டும் என எனது தாயார் மிகவும் விரும்பினார். ஆனால், அவர் இப்போது என்னுடன் இல்லை. நான் சாதிக்கும்போது என் தாய் ஏதாவது ஒரு வடிவத்தில் என்னுடன் இருக்க வேண்டும் என விரும்பினேன்.
மரத்தான் போட்டியில் ஓடியபோது என் தாயாருடன் பேசிக்கொண்டு சென்றதுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டது. இப்போது போட்டியில் வெற்றி பெற்று விட்டேன். எனது தாயாரின் கனவும் நனவாகி விட்டது” என ரிபேக்கா உருக்கமாக பேசியுள்ளார்.






