ஒலிம்பிக்கில் ஓர் போராளி : கைகளைத் தலைக்குமேல் குறுக்காக வைத்தபடி ஓடியது ஏன்?

958

1

ஆண்களுக்கான மரதன் ஒலிம்பிக் போட்டியில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஃபெயிசா லிலேசா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

எல்லைக்கோட்டைத் தொடுவதற்கு சில அடிகள் தூரத்திலிருந்து தன் இரு கைகளையும் தலைக்கு மேல் குறுக்காக வைத்தபடி ஓடினார் அவர். பதக்கம் வாங்கும்போதும் அதே சைகையைச் செய்தார்.

எத்தியோப்பியாவில் நடைபெற்றுவரும் அரசியல் சூழ்நிலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவும் மக்களின் போராட்டம் உலகின் கவனத்துக்கு வரவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் ஃபெயிசா.

‘‘எங்கள் நாட்டில் மிக மோசமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுப்பவர்கள் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

ஒரோமோ பழங்குடி மக்களின் நிலங்களை அரசாங்கம் கைப்பற்றிக்கொண்டு, வேறு இடங்களுக்குச் செல்ல வற்புறுத்தி வருகிறது. தங்கள் நிலங்களை விட்டுச்செல்ல மாட்டோம் என்று பழங்குடி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த நடவடிக்கையில் இறங்கினேன். நான் எத்தியோப்பியா சென்றவுடன் கொல்லப்படலாம் அல்லது சிறையில் அடைக்கப்படலாம்.

மிக மோசமான நாடாக மாறிவிட்டது எங்கள் எத்தியோப்பியா. ஒருவேளை நான் வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்தாலும் சுதந்திரம் இல்லாத மக்களுக்காகப் போராடவே செய்வேன். ஒரோமோ மக்கள் எங்கள் பழங்குடியினர். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காகவும் அமைதிக்காகவும் போராடுகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக நிற்பதும் போராடுவதும் என் கடமை” என தெரிவித்துள்ளார் ஃபெயிசா லிலேசா.

2 3