புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விட்ட போலந்து வீரர்!!

1291

piotr

போலந்தைச் சேர்ந்த தட்டு எறியும் (Discus) வீரர் பியோடர் மாலாச்சோவ்ஸ்கி (Piotr Małachowski) புற்றுநோயால் அவதிப்படும் சிறுவனுக்கு உதவ தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விட்டுள்ளார்.

33 வயதான பியோடர் மாலாச்சோவ்ஸ்கி 2008 மற்றும் தற்போது இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்நிலையில், ஓலக் என்ற சிறுவனின் தாய் பியோடருக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

ஓலக்கிற்கு கண்ணில் புற்றுநோய் இருப்பதாகவும், இரண்டு ஆண்டுகளாக நோயுடன் போராடும் அவனுக்கு நியூயார்க்கில் சிகிச்சை அளிக்க உதவுமாறும் அந்தக் கடிதத்தில் அவர் கோரியிருந்தார்.

இதையடுத்து, ரியோ ஒலிம்பிக்கில் தான் வாங்கிய வெள்ளிப் பதக்கத்தை ஏலத்தில் விட்டு வரும் பணத்தை சிறுவனுக்கு அளிக்க பியோடர் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

”நான் ரியோவில் தங்கத்திற்காகப் போராடினேன். தற்போது அதை விட விலை மதிக்க முடியாத ஒன்றுக்காக போராடுமாறு அனைவரையும் அழைக்கிறேன்,” என்று பியோடர் தெரிவித்துள்ளார்.

அவரது ஃபேஸ்புக் அறிவிப்பைப் பார்த்துவிட்டு பதக்கத்தை வாங்க பலர் முன்வந்துள்ளனர்.

1 2 3