ஒட்டுமொத்த ஈழத் தமிழரையும் நான் குற்றம் சுமத்தவில்லை. நான் யாரைப் பற்றி பேசினேன் என்பது என்னைத் தெரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும் என இயக்குநர் சேரன் விளக்கம் அளித்துள்ளார்.
கன்னா பின்னா திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன், ஈழத் தமிழர்கள் தான் திருட்டு டி.வி.டியை வெளியிடுகிறார்கள், அவர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு இயக்குனர் சேரன் கூறியிருக்கும் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு நான் எதற்காக பேசினேன், யாரைப்பற்றி பேசியிருப்பேன் என புரிந்திருக்கும். என்னைத் தெரியாதவர்களுக்கு நான் என்ன விளக்கம் சொல்வது,
இதுவரை திரையுலகில் இருந்து வெளிநாடுகளில் இருந்து திருட்டு DVD வருகிறது. ஒன்லைனில் பதிவேற்றம் செய்கிறார்கள் என்று கதறியபோது இந்த விமர்சகர்கள் ஏன் ஒரு வார்த்தைகூட அவர்களது செயல்களை கண்டித்து வெளியிடவில்லை..
அப்போ எங்களுடைய வாழ்க்கை பற்றி அவர்களுக்கு கவலை இல்லையா, உலகெங்கும் நண்பர்களை கொண்டு(அவர்களும் இலங்கைத் தமிழர்கள்தான்) C2H நிறுவனக்கிளைகள் தொடங்க முயன்றபோது அவர்களை தடுத்தவர்கள், மிரட்டியவர்கள் இன்றும் திருட்டுத்தனமாக விற்பவர்கள்தான். ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களை நான் சொல்லியிருக்கிறேன் என்பது தவறு…
நல்ல குணமும் நேர்மையும் கொண்ட ஈழத் தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் என்னை நன்கு தெரியும்.. அவர்கள் யாரும் என்னை தவறாக நினைக்க மாட்டார்கள்… இவ்வாறு சேரன் தம்முடைய அறிக்கையில் கூறியுள்ளார்.







