இறுதிவரை போராடித் தோற்ற இலங்கை அணி : தொடரில் அவுஸ்திரேலியா 2-1 என முன்னிலை!!

519

Sri Lanka's Dilruwan Perera , second left, celebrates the wicket of Australia's Travis Head during their third one day international cricket match in Dambulla, Sri Lanka, Sunday, Aug. 28, 2016. (AP Photo/Eranga Jayawardena)

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, இரண்டு விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நேற்று தம்புள்ளை விளையாட்டரங்கில் ஆரம்பமானது. முன்னதாக நாணய சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அணியின் ஆரம்ப வீரர் தனுஷ்க குணதிலக ஐந்து ஓட்டங்களுடன் வௌியேறி அதிர்ச்சியளித்தார்.

இதனையடுத்து களத்தில் இருந்த டில்ஷானுடன் கைகோர்த்த குஷல் மென்டீஸ் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதேவேளை ஓய்வை அறிவித்துள்ள இலங்கையின் அதிரடி நாயகன் டில்ஷானுக்கு இது இறுதி சர்வதேச ஒருநாள் போட்டி என்பதால் இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கியிருந்த அவர், 42 ஓட்டங்களைப் பெற்றவேளை, ஆட்டமிழந்து, அரைச் சதத்தை தவறவிட்டார்.

எனினும், அவரது நிதான ஆட்டம் இலங்கை அணிக்கு வலுச் சேர்த்தது. மறுபுறம் வழமைபோல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் சந்திமால் 102 ஓட்டங்களை விளாசித் தள்ளினார்.

எனினும் ஏனைய வீரர்கள் அவ்வளவாக கைகொடுக்காததால், 49.2 ஓவர்களில், 226 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது இலங்கை.

இதன்படி 227 என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியின், டேவிட் வோனர் 10 ஓட்டங்களுடனும், பின்ஜ் 30 ஓட்டங்களுடனும் மார்ஸ் ஒற்றை ஓட்டத்துடனும் வௌியேறினர்.

எனினும் அடுத்ததாக களத்திற்கு வந்த ஜோர்ச் பெல்லி இலங்கை பந்து வீச்சாளர்களை களங்கடித்தார்.

70 ஓட்டங்களை விளாசிய நிலையில் அவரும் ஆட்டமிழக்க 46 ஓவர்களை எதிர் கொண்ட நிலையில் 8 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியா, 24 பந்துகள் மீதமிருக்க இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றியைத் தனதாக்கியது.

இதன்படி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அந்த அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.