கவுண்டியில் டக் அவுட்டான கம்பீர் : சதம் அடித்த சாவ்லா!!

402

chawla_county_001

இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவிக்கும் டெல்லியை சேர்ந்த தொடக்க வீரர் கவுதம் கம்பீர் இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் கவுன்டி போட்டியில் எசக்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் (இரண்டு முதல் தர போட்டி + இரண்டு ஏ பிரிவு போட்டி) ஒருமுறை கூட அரைசதம் அடிக்கவில்லை.

அதிகபட்சமாக நார்தாம்ப்டன்ஷயர் அணிக்கெதிரான முதல் தர போட்டியில் 31 ஓட்டங்களும், டெர்பிஷயர் அணிக்கெதிரான ஏ பிரிவு போட்டியில் 21 ஓட்டங்களும் எடுத்தார்.

சமீபத்தில் முடிந்த லன்காஷயர் அணிக்கெதிரான ஏ பிரிவு போட்டியில் வெறும் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்த இவர், பிரிஸ்டோல் நகரில் நடக்கும் கிளவ்சஸ்டர்ஷயர் அணிக்கெதிரான முதல் தர போட்டியில் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் சமர்சட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இளம் இந்திய சுழற்பந்துவீச்சாளர் பியுஸ் சாவ்லா, பேட்டிங்கில் அசத்தி வருகிறார். மிடில்சக்ஸ் அணிக்கெதிராக லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் முதல் தர போட்டியில் துடுப்பாட்டத்தில் அசத்தி வரும் பியுஸ் சாவ்லா சதம் அடித்தார்.

ஒருகட்டத்தில் சாமர்சட் அணி, 211 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. எட்டாவது வீரராக களமிறங்கிய பியுஸ் சாவ்லா (112 ஓட்டங்கள்), சதம் அடித்ததன் மூலம் 400 ஓட்டங்களை தாண்டியது.

பியுஸ் சாவ்லா கூறுகையில், கடந்த முறை கவுன்டி போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இதேபோல இம்முறையும் நடக்கும் என்று நம்புகிறேன்.

இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி தெரிவாளர்களை என் மீது திசைதிருப்ப விரும்புகிறேன். விரைவில், இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.