முன்னாள் தலைவர்கள் ஒத்துழைக்கவில்லை : டில்ஷான் பகிரங்க குற்றச்சாட்டு!!

296

Dilshan

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக செயல்பட்ட போது அஞ்சலோ மத்யூஸ் மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோர் தனக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்கவில்லை என திலகரத்ன டில்ஷான் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற திலகரத்ன டில்ஷான் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளார்.

ஒய்வு பெற்றதற்கான காரணங்களை அறிவித்த திலகரத்ன டில்ஷான், புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவே இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக தெரிவித்தார்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லாததால், தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபடுவதில் எந்தவிதமான பயனும் இல்லை.

இந்த நேரத்தில் புதிய வீரர் ஒருவர் பயிற்சி எடுக்கும் வாய்ப்பை வழங்க தான் தீர்மானித்ததாக திலகரத்ன டில்ஷான் கூறியுள்ளார்.

மேலும் சில ஆண்டுகள் விளையாடக்கூடிய திறமை இருக்கின்ற போதிலும் அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்குபெற புதிய வீரர் ஒருவருக்கு அவகாசம் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும்.

இதேவேளை, அரசியலில் பிரவேசிக்க தனக்கு எந்தவிதமான நோக்கங்களும் இல்லை என்றும், தனது குடும்பத்தினரோடு கூடுதலான நேரத்தை செலவிடுவதற்காகவே தான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற தீர்மானித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அரசியலில் பிரவேசித்து மீண்டும் மன அமைதியை பறிகொடுக்க தான் தயாரில்லை என திலகரத்ன டில்ஷான் மேலும் தெரிவித்துள்ளார்.