ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்ட காரணத்துக்காக பிரெஞ்சு டென்னிஸ் சம்மேளனம் தனது நாட்டைச் சேர்ந்த மூவருக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
டென்னிஸ் வீரர் பெனொய்ட் பாய்ரே, வீராங்கனைகளான கிறிஸ்டினா மிலாடேனோவிக், கரோலின் கார்சியா ஆகிய மூவரே தடைக்குள்ளானவர்களாவர். இந்த மூவரினதும் நடத்தை சம்மேளனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா முடிவடைந்த பின்னர் பிரெஞ்சு டென்னிஸ் சம்மேளனத்தின் குழு இந்த மூவர் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தது.
இவர்கள் சம்மேளனத்தின் விதிகளை மீறியுள்ளதுடன் சம்மேளனத்தின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்’ என அந்த அறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளது.
ரியோ ஒலிம்பிக்கில் இரண்டாவது சுற்றில் இத்தாலியின் ஃபேபியோ ஃபொஞ்ஞினியிடம் தோல்வி அடைந்த பாய்ரே, ஒலிம்பிக் வீரர்கள் கிராமத்திலிருந்து நெடு நேரம் வெளியே இருந்தமைக்காக உடனடியாக நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தார். இதன் காரணமாகவே அவரக்கு பிரெஞ்சு டென்னிஸ் சம்மேளனம் தடை விதித்துள்ளது.
மிலடேனோவிக், கார்சியா ஆகிய இருவரும் தங்களது சீருடை தொடர்பாக பிரெஞ்சு டென்னிஸ் சம்மேளனத்தை கடுமையாக விமர்சித்தமைக்காக தடை செய்யப்பட்டுள்ளனர்.
செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி எடுக்கப்படவுள்ள இறுதித் தீர்மானம்வரை இவர்கள் மூவரும் பிரான்ஸ் அணிக்கு தெரிவு செய்யப்படமாட்டார்கள் என பிரெஞ்சு டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.







