நேற்று ரங்கிரி தம்புள்ள மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய வேளையில் இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ்.
பின்கால் தசை உபாதையால் அவதிப்பட்டு போட்டியின் நடுவில் Retired hurt முறையில் மைதானத்தை விட்டு வெளியேறினார். பின் இலங்கை போட்டியில் விக்கட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டு இருக்கும் போது அந்த உபாதையோடு அணிக்காக இறுதி நேரத்தில் வந்து 12 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
ஆனாலும் அந்த ஓட்டங்கள் இலங்கை அணியை வெற்றிக்கு எடுத்துச் செல்ல முடியமால் போனது. எது எவ்வாறாயினும் உபாதையோடு மீண்டும் வந்து துடுப்பாடியது பாராட்டத்தக்க விடயமே.
இந்த நிலையில் தற்போது அஞ்சலோ மத்தியூஸ் பின்கால் தசை உபாதையால் அவுஸ்திரேலிய தொடரில் இருந்து வெளியேறி இன்று கொழும்பு நோக்கி வந்து CT ஸ்கேனிற்கு உட்படுத்தப்பட உள்ளார்.
இதனால் இறுதி ஒருநாள் போட்டி மற்றும் திலகரத்ன டில்ஷான் இலங்கை அணிக்காக விளையாட உள்ள கடைசி 2 டி20 சர்வதேசப் போட்டிகளிலும் அஞ்சலோ மத்தியூஸ் பங்கு கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கட் இன்னும் அஞ்சலோ மத்தியூசுக்குப் பதிலாக இன்னுமொரு வீரரை அணிக்கு அழைக்கவில்லை. அத்தோடு அணியின் தலைமைப் பதவி உப தலைவர் தினேஷ் சந்திமாலிற்கு வழங்கப்பட்டுள்ளது.
தினேஷ் சந்திமால் நேற்று போட்டியின் பின் செய்தியாளர் மாநாட்டில் பேசும் போது, அஞ்சலோ மத்தியூசின் உபாதை மிக மோசமான நிலையில் உள்ளதால் அநேகமாக அவுஸ்திரேலிய தொடரில் இருந்து வெளியேறுவார்” என்று கூறி இருந்தார்.
4 வருடங்களுக்கு முன், பின்கால் தசை உபாதை காரணமாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற கொமன்வெல்த் பேங்க் முத்தரப்பு போட்டித் தொடரின் இறுதி போட்டிகள் மற்றும் பங்களாதேஷில் நடைபெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகளிலும் மத்தியூஸ் பங்குகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.






