சிரியா மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் எந்த நேரத்திலும் கூட்டாக தாக்குதல் நடத்தக் கூடும் என்ற நிலையில் சிரியாவுக்கு ஆதரவாக மத்திய தரைக்கடல் பகுதிக்கு ரஷ்ய போர்க் கப்பல்கள் விரைகின்றன.
ரசாயன குண்டுகள் மூலம் பொதுமக்களை சிரியா படுகொலை செய்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சிரியாவுக்கு எதிராக யுத்தம் நடத்த முனைப்பு காட்டுகின்றன.
இது தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் சிரியா மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று ரஷ்யாவும் ஈரானும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்த நிலையில் மத்திய தரைக்கடலை சுற்றிய பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் ரஷ்ய போர்க் கப்பல்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. செப்டம்பர் முதல் வாரத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் ரஷ்ய போர்க் கப்பல்கள் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளன.
இஸ்ரேல் Vs ஈரான்
இதேபோல் இஸ்ரேலும் தமது எல்லையில் ராணுவ துருப்புகளை தயார் நிலையில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளது. “சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தில் இஸ்ரேல் தலையிடாது.
அதே நேரத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும். அதற்காகவே எல்லையில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது என்று அந்நாடு அறிவித்துள்ளது. குறிப்பாக ஈரானை நோக்கி தனது ஏவுகணைகளை இஸ்ரேல் தயார் நிலையில் வைத்துள்ளது.