நெல்சன் மண்டேலா வீடு திரும்பியதாக வெளியான தகவல் வதந்தி!!

481

46664 Concert: In Celebration Of Nelson Mandela's Life - Performance

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தென்னாபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா குணமடைந்ததை அடுத்து சனிக்கிழமை வீடு திரும்பியதாக வெளியான தகவல் தவறானது என்று அதிபர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

தென் ஆபிரிக்க வரலாற்றில் அதிபராக பதவியேற்ற முதல் கறுப்பினத் தலைவர் மண்டேலா. ஐந்தாண்டுகள் மட்டும் அதிபராக பதவி வகித்த மண்டேலா, அதன் பின்னர் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்று தனது சொந்த கிராமமான குனு வில் ஓய்வெடுத்து வந்தார்.

95 வயதாகும் நெல்சன் மண்டேலாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு நுரையீரலில் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சுவாசக் கோளாறு, கடுமையான நுரையீரல் நோய் தொற்றின் காரணமாக நெல்சன் மண்டேலா கடந்த மாதம் 8ம் திகதி பிரட்டோரியாவிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.



தொடர்ந்து தீவிர கண்காணிப்பிலேயே இருந்துவந்த அவருக்கு உயிர் காப்பு இயந்திரம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தனது 95வது பிறந்த நாளையும் ஆஸ்பத்திரியிலேயே கொண்டாடிய நெல்சன் மண்டேலா சுமார் 2 மாத சிகிச்சைக்கு பின்னர் இன்று வீடு திரும்பியதாக உள்ளூர் ஊடகங்கள் இன்று காலை செய்தி வெளியிட்டன.

அவர் டிஸ்சார்ஜ் ஆகும் செய்தி கடைசி வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த செய்திகள் தெரிவித்தன. இந்நிலையில், இதுதொடர்பாக தென் ஆபிரிக்க அதிபர் மாளிகை இன்று பிற்பகல் வெளியிட்ட செய்திக் குறிப்பில் நெல்சன் மண்டேலா ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பியதாக வெளியான செய்தி தவறான செய்தியாகும் என தெரிவித்துள்ளது.

27 ஆண்டுகள் சிறை தென் ஆபிரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் விடுதலை பெற வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தியவர் நெல்சன் மண்டேலா. இதற்காக 27 ஆண்டுகள் சிறைக்காவலில் இருந்த மண்டேலா, 1994ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் அதிபராக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.