அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் – விழாக் ​கோலம் பூண்டுள்ள வத்திக்கான்!!

549

Mother

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கு வதையொட்டி வாடிகன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழு பங்கேற்கிறது. ஐரோப்பாவின் மாசிடோனியாவில் உள்ள ஸ்கோப்ஜே என்ற நகரில் 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ம் திகதி அன்னை தெரசா பிறந்தார்.

18 வயதில் லொராட்டா சகோதரிகளின் சபையில் சேர்ந்தார். இந்தியாவில் ஏழை பள்ளி குழந்தைகளுக்கு கல்வி போதிக்க விரும்பினார். இதற்காக 1929-ம் ஆண்டு இந்தியா வந்தார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜி லிங்கில் துறவற பயிற்சியை தொடங்கினார். 1937-ம் ஆண்டு உறுதி மொழி எடுத்து துறவறம் மேற்கொண்டார்.

1950-ம் ஆண்டு கொல்கத்தாவில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக ‘மி‌ஷனரிங் ஆப் சாரிட்டிஸ்’ என்ற அமைப்பை தொடங்கினார். மறு ஆண்டில் அவர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ குடிமகள் ஆனார். அன்பு கருணையுடனும், தாயுள்ளத்துடனும் தொண்டு செய்து வந்த அன்னை தெரசா மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அவரது சேவையை போற்றி மத்திய அரசு 1980-ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கியது. முன்னதாக 1979-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. உடல் நலக்குறைவால் 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் திகதி தனது 87-வது வயதில் அன்னை தெரசா மரணம் அடைந்தார்.

அன்னை தெரசா மறைவுக்குப் பின்பும் பல அற்புதங்கள் நிகழ்த்தினார். கொல்கத்தாவைச் சேர்ந்த மோனிகா பேஸ்ரா என்ற பெண் அன்னை தெரசா உருவம் பதித்த டாலர் அணிந்ததால் அவருக்கு அடிவயிற்றில் ஏற்பட்டிருந்த புற்றுநோய் கட்டி குணம் அடைந்தது. இதை அற்புதம் என போப் ஆண்டவர் 2-ம் ஜான்பால் அங்கீகரித்தார்.

அதன்பின் 2008-ம் ஆண்டு பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரினோ என்பவரது தலையில் இருந்த உயிருக்கு ஆபத்தான மூளைக்கட்டி அவரது குடும்பத்தினர் அன்னை தெரசாவிடம் வேண்டியதால் குணம் அடைந்தார். இந்த அற்புதத்தை போப் பிரான்சிங் அங்கீகரித்து அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்குவதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதன்படி அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா இன்று ரோம் நகரில் உள்ள வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் நடக்கிறது. உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு (இலங்கை, நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு வழங்கப்படுகிறது. அப்போது கூட்டுப் பிரார்த்தனையும் நடக்கிறது.

இந்த இரு நிகழ்ச்சிகளிலும் 3 இலட்சம் பேர் பங்கேற்கிறார்கள். அவர்கள் வாடிகன் சிட்டியில் குவிந்துள்ளதால் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழு பங்கேற்கிறது. இதற்காக அவர்கள் ஏற்கனவே வாடிகன் போய்ச் சேர்ந்து விட்டனர்.

மேற்கு வங்காளம் சார்பில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு குழுவும், டெல்லி மாநில அரசு சார்பில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஒரு குழுவும் வாடிகன் சென்றுள்ளது.

கொல்கத்தாவில் இருந்து ‘மி‌ஷனரிங் ஆப் சாரிடிஸ்’ அமைப்பைச் சேர்ந்த 50 கன்னியாஸ்திரிகளும், நாடு முழுவதும் இருந்து பாதிரியர்களும், கிறிஸ்தவர்களும் வாடிகன் சென்றுள்ளனர்.

புனிதர் பட்டம் வழங்கப்படுவதையொட்டி கொல்கத்தாவில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும், பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது.