சவுதிக்குப் பணிப் பெண்ணாக சென்ற ஒருவர் வீட்டு எஜமானர்களாலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன அதிகாரியாலும் கடுமையாகத் தாக்கப்பட்டு நோய்வாய்ப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளார்.
பின்னர் இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பியதன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று முன்தினம் முறைப்பாடு செய்துள்ளார்.
உடப்புசல்லாவ லக்கிலேண்ட் குரூப் கொண்டகொல தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளியான கந்தையாகலைச் செல்வி (43) என்ற நான்கு குழந்தைகளின் தாய்க்கே இவ் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பாதிப்புக்குள்ளான பெண் இவ்வருடம் ஜூலை 5 ஆம் திகதி சவுதிக்கு வெளிநாட்டு முகவர் நிலையம் மூலமாக பணிப்பெண்ணாக அனுப்பப்பட்டார்.
றியாத் வீடொன்றில் தொழிலுக்காக இணைந்த அன்றைய தினமே இரவே இவர் அவ்வீட்டு எஜமானியால் அவரின் தங்கையின் மதினா வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அவ்வீட்டில் தொழில்புரிந்த நிலையில் இவர் கடுமையான சிறுநீர் அதிகபோக்கு நோயினால் பெரிதும் பாதிப்படைந்துள்ளார். இதேவேளை, இவருக்கு றியாதின் அடையாள அட்டை இல்லாமையினால் மருத்துவர்கள் சிகிச்சை வழங்க மறுத்து விட்டனர். இதனால் இவர் மீண்டும் றியாத் வீட்டுக்கே அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வீட்டு எஜமானி இவரை வேலைக்கு வழங்கிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்குவைத்து அந்நிறுவன அதிகாரி குறித்த பெண்ணை தாக்கி அறை ஒன்றில் அடைத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் மீண்டும் அந்தப் பெண்ணை எஜமானியிடம் இவர் ஒப்படைக்க வீட்டுக்கு அழைத்து சென்று கணவனும் மனைவியும் இவரை தாக்கி சித்திரவதை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.






