யூடியூப்பில் ஆபாச வீடியோக்கள், திரைப்படங்களை பதிவேற்றம் செய்தால் தண்டனை!!

858

youtube

யூடியூப்பில் ஆபாச வீடியோக்கள் மற்றும் திரைப்படங்களை கசியவிடுபவர்களின் விபரங்களை உடனடியாக கண்டுபிடித்து தருமாறு கூகுள் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் ஒன்று கூகுள் நிறுவனத்தின் கீழ் செயல்படும் யூடியூப்பில் எங்கள் நிறுவனத்தை அவதூறு செய்யும் வகையில் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அந்த வீடியோவை தடை செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தது.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதை தடை செய்வதோடு மட்டுமில்லாமல், பதிவேற்றம் செய்தவர்களின் விபரங்களையும் அளிக்குமாறு உத்திரவிட்டது.

இதற்கு கூகுள் நிறுவனம் சார்பில், இந்தியாவில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களுக்கு தான் தடை செய்ய இந்த நீதி மன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. பிற நாடுகளில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை தடை செய்வதற்கு இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை, அது அந்நாட்டை சேர்ந்த நீதிமன்றத்துக்குத்தான் அதிகாரம் உள்ளது. அதன் காரணமாக இந்த வீடியோவை தடை விதிக்கமுடியாது என தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், பாதிக்கப்பட்டவர்கள் கோரினால் கூகுள் நிறுவனம், நிறுவனக் கொள்கையை காரணம் காட்டி விபரங்களை தர மறுப்பதை ஏற்க முடியாது. தவறான வீடியோ பதிவேற்றம் செய்தவர்கள், வெளிநாடுகளில் இருந்தாலும் முழுமையாக தகவல் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் யூடியூப்பில் திரைப்படங்களை திருட்டுத்தனமாக கசியவிடுவது, பெண்கள் பற்றிய ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களின் விவரங்களை கேட்டறியும் வகையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது.

இதனால் தேவையற்ற வீடியோக்கள் மற்றும் பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இது சுலபமாக இருக்கும் என கூறப்படுகிறது.