சிரியா மீது போர்த்தொடுக்குமா அமெரிக்கா??

608

syria

தென்மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியா எண்ணை வளம் மிக்கது. இதன் மொத்தபரப்பளவு 71,500 சதுர மைல்.

வடக்கில் துருக்கியும், மேற்கில் இஸ்ரேல், லெபனானும், கிழக்கில் ஈராக்கும், தெற்கில் ஜோர்டானும் எல்லைகளாக உள்ளன. சிரியாவின் ஜனாதிபதியாக பஷர் அல்–ஆசாத் உள்ளார்.

கடந்த 1971ம் ஆண்டு முதல் கடந்த 42 ஆண்டுகளாக இவரது குடும்பத்தினர் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றனர்.



அவர்களின் சர்வாதிகார போக்கு மக்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களின் கோபம் நீறுபூத்த நெருப்பாக தகித்து கொண்டிருந்தது. கடந்த 2010ம் ஆண்டு டிசம்பரில் துனிசியாவில் அரசுக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் வெடித்தது.

அது படிப்படியாக வலுவடைந்து 2011ம் ஆண்டு பிப்ரவரியில் கலவரமாக மாறியது. அதே போன்று அண்டை நாடுகளான எகிப்து, லிபியாவுக்கும் பரவி அது உள்நாட்டு போர் ஆக உருவானது.

மக்கள் சக்தியை தாக்கு பிடிக்க முடியாமல் துனிசியா, எகிப்து நாடுகளின் ஜனாதிபதிகள் ஷின் எல் அபிடினே பென் அலி, ஹோஸ்னி முபாரக் ஆகியோர் பதவி விலகினர்.

லிபிய தலைவர் மும்மர் கடாபி புரட்சிபடையினரால் அடித்துக் கொல்லப்பட்டார். தற்போது அங்கு குடும்ப ஆட்சி மறைந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி மலர்ந்துள்ளது.

அதே நிலை சிரியாவிலும் தொடர அந்நாட்டு மக்கள் விரும்பினர். அதை தொடர்ந்து அரபுநாடுகளில் ஒன்றான சிரியாவிலும் கடந்த 2011 மார்ச் 15ம் திகதி மக்கள் புரட்சி வெடித்தது. தொடக்கத்தில் ஜனாதிபதி பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தன.

அது மாபெரும் புரட்சியாகி 2011 ஏப்ரல் மாதத்தில் நாடு தழுவிய அளவில் போராட்டம் வெடித்து கலவரமாக மாறியது. தலைநகர் டமாஸ்கஸ், ஹோம்ஸ், அலெப்போ உள்ளிட்ட நாட்டின் அனைத்து நகரங்களிலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

அரசுக்கு எதிராக சிரியா சுதந்திரப்படை என்ற மக்கள் புரட்சி படை கடந்த 2011 ஜூலை மாதம் உருவாக்கப்பட்டது. அதில் அரசின் நடவடிக்கை பிடிக்காத இராணுவ வீரர்கள்,இராணுவ அதிகாரிகள் இளைஞர்கள் சேர்ந்தனர்.

இதனால் அப்படை வலுவடைந்தது. அவர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து இராணுவத்தை எதிர்த்து போரிட்டனர்.

கலவரத்தை அடக்க ஆசாத் தனது இராணுவத்தை ஏவி விட்டார். அவர்கள் நடத்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதல்களால் குவியல் குவியலாக பொதுமக்கள் கொல்லப்பபட்டு வருகின்றனர்.

கலவரம் தொடங்கி 2 1/2 ஆண்டுகளாகியும் இன்னும் கலவரம் முடிவுக்கு வரவில்லை. கடந்த ஜூன் மாதம் வரை சுமார் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

இராணுவ நடவடிக்கையை கை விடும்படியும் பதவி விலகி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தும் படியும் ஜனாதிபதி ஆசாத்தை ஐ.நா. சபை எச்சரித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவற்றின் நட்பு நாடான பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் கேட்டுக் கொண்டன.

அதற்கு தொடக்கத்தில் சம்மதம் தெரிவித்த ஆசாத் பின்னர் பதவி விலக மறுத்து விட்டார். அதைத் தொடர்ந்து போராட்டம் கடுமையானது. புரட்சி படைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகள் மறைமுகமாக ஆயுத உதவியும் மருந்து மற்றும் உணவு பொருட்கள் வழங்கி வருகின்றன.

சவுதி அரேபியா, கட்டார், துருக்கி ஆகிய அண்டை நாடுகளும் ஆயுத உதவி வழங்கி வருகின்றன. இதனால் புரட்சி படையின் கை ஓங்கியுள்ளது. அவர்கள் இராணுவத்தின் வசம் இருந்த முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

இதை பொறுத்து கொள்ள முடியாத ஆசாத் அவற்றை மீண்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதிரடி தாக்குதல் நடத்த இராணுவத்துக்கு உத்தரவிட்டார்.

புரட்சிபடையின் பிடியில் இருக்கும் தலைநகர் டமாஸ்கசின் புறநகரான ஷமால்கா மீது கடந்த 21ம் திகதி இராணுவம் போர் விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகளை வீசி கொடூர தாக்குதல் நடத்தியது.

அதில் சுமார் 1429 பேர் நச்சுப்புகை தாக்கியதில் மூச்சு திணறி பலியாகினர். பலியானவர்களில் 600க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். இச்சம்பவம் உலகநாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஐ.நா சபையும், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏற்கனவே சிரியாவிடம் இரசாயன குண்டுகள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.

அதை சிரியா மறுத்தது. இந்த நிலையில் இரசாயன குண்டுகள் இருந்தாலும் போராடும் மக்கள் மீது வீசினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சிரியாவை கடந்த 2012ல் அமெரிக்கா எச்சரித்தது.

இதே கருத்தை பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தும் கூறின. இந்த எச்சரிக்கையையும் மீறி சிரியா இரசாயன குண்டுகளை வீசி சொந்த மக்களின் இன்னுயிரை பறித்துள்ளது. இதனால் கோபத்தின் எல்லைக்கு சென்றுள்ள அமெரிக்கா சிரியா மீது இராணுவ தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளது.

இதே காரணத்தை காட்டி தான் கடந்த 2003ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அப்போது ஈராக் ஜனாதிபதியாக சதாம் உசேன் இருந்தார். இவர் ஈராக்கின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தார்.

அவர் பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் அவரை கடந்த 2003 டிசம்பர் 13ம் திகதி அமெரிக்கா கைது செய்தது. அவர் மீது விசாரணை நடத்தி 2006 டிசம்பர் 30ம் திகதி தூக்கிலிட்டது. அப்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக புஷ் பதவி வகித்தார்.

தற்போது அதே காரணத்தை முன்வைத்து சிரியா மீதும் போர் தொடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதற்கான ஆயத்த பணிகளிலும் தீவிரமாக உள்ளது.

அமெரிக்காவுக்கு துருக்கி, இஸ்ரேல், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவாக உள்ளன. போர் நடவடிக்கைக்கு முன்னோடியாக அமெரிக்கா தனது 6 போர் கப்பல்களை சிரியா அருகே மத்திய தரைக் கடலுக்கு அனுப்பியுள்ளது.

அதே நேரத்தில் சிரியா மீதான இராணுவ தாக்குதலுக்கு ரஷ்யா, சீனா, இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் தாக்குதலை முறியடிக்க ரஷ்யா தனது 3 போர்க்கப்பல்களை சிரியா கடல் பகுதிக்கு அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதனால் எந்நேரமும் போர் வெடிக்கலாம் என்ற அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சிரியா மீது போர் தொடுக்கும் நடவடிக்கையை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தள்ளி வைத்துள்ளன.

சிரியா மீது போர் தொடுக்க பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறவே அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2003ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போரினால் சர்வதேச நாடுகளில் கச்சா எண்ணை விலை அதிகரித்து தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது, மற்றொரு எண்ணை வள நாடான சிரியா மீதும் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இப்போது சிரியா விவகாரத்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.