இணைந்த நேர அட்டவணை பக்கசார்பானது : ஒத்துழைக்கப்போவதில்லை : வட மாகாண இலங்கை போக்குவரத்து சபை!!

730

img_0281

வவுனியா இலங்கை போக்குவரத்து சாலையில் இன்றைய தினம் (09.09.2016) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இணைந்த நேர அட்டவணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லையென இ.போ.ச இணைந்த தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

வடமாகாண சபையினால் ஒரு பாதையில் தனியார் பேரூந்துக்கு 60 வீத சேவையும் இலங்கை போக்குவரத்து சபைக்கு 40 வீத சேவையும் வழங்கியிருப்பதுடன் இன்று இலங்கை போக்குவரத்துசபை சிறந்த சேவையை வழங்கிவரும் வவுனியா – யாழ்ப்பாணம், வவுனியா – மன்னார், மன்னார் – யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு போன்ற சில பாதைகளுக்கு மட்டுமே பாதை அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அட்டவனையினால் எமது சாலைக்கு வருமான வீழ்ச்சி ஏற்படும்போது 2500 மேற்பட்ட எமது குடும்பத்தின் நிலை கேள்விக்குறியாகின்றது. அத்துடன் பருவகால சீட்டு பெற்று உரிய நேரத்துக்கு செல்லவேண்டிய மாணவர்கள், உத்தியோகத்தர்களின் பயணங்களிலும் தாமதம் ஏற்படும்.

அத்துடன் எம்மால் பணியாற்றி வந்த முக்கிய நேரங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தனியார் பேரூந்துகள் அதிகம் பயணிக்கும் வழித்தடங்களுக்கு நேர அட்டவணை தயாரிக்கப்படவில்லை. எனவே ஏனைய இடங்களைப்போல் 50 இற்கு 50 இற்கு என்ற வீதத்தில் சேவையில் ஈடுபடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டால் மாத்திரமே நாம் இணைந்த நேர அட்டவணைக்கு ஒத்துழைப்போம்.

அத்துடன் பிராந்திய முகாமையாளர் பிராந்திய செயலாற்று முகாமையாளர், சாலை முகாமையாளர்களுக்கு நாம் இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புவதாவது ‘உங்கள் பதவிக்காகவோ வேறு பதவிக்காகவோ தொழிற்சங்கத்தின் அனுமதி இன்றி இணைந்த சேவைக்கு கையொப்பமிட்டால் பதவிகளில் இருக்க முடியாது என்பதுடன் வட மாகாணத்தில் எந்த சாலையிலும் நீங்கள் பணியாற்ற நாம் அனுமதிக்கப் போவதில்லை.

இணைந்த நேர அட்டவணை பக்கச்சார்பானதாக காணப்படுவதனால் நாம் இதற்கு தயாராகவில்லையென வவுனியா இலங்கை போக்குவரத்து சாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.