இலங்கை கிரிக்கெட் அணியில் முக்கிய பிரச்சினையாக அது உள்ளது : மனம் திறந்த டில்ஷான்!!

643

Sri Lankan cricket player Tillakaratne Dilshan speaks during pre-tournament media interaction ahead of their ICC World Twenty20 2016 cricket tournament in Mumbai, India, Wednesday, March 9, 2016.(AP Photo/Rajanish Kakade)

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான திலகரட்ன டில்ஷான் தனது அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும் விடை கொடுத்துள்ளார்.

கடந்த 1999ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான அவர் நேற்று முன்தினம் சர்வதேச போட்டிகளுக்கு விடைகொடுத்துள்ளார்.

இந்நிலையில் தனது 17 வருட கால கிரிக்கெட் வாழ்க்கையில் பெற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் எதிர்கால இலங்கை கிரிக்கெட் அணி குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் கடந்த போட்டிகளில் வெற்றி பெற முயற்சித்தோம் எனினும் முடியாமல் போனது. நேற்றைய போட்டியில் இன்னும் 20 ஓட்டங்களை பெற்றிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.

தோல்வியுடன் விடைபெறுவது கவலையாகத்தான் உள்ளது. எனினும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் எதிரணிக்கு சவாலளித்தே தோல்வியைத் தழுவினோம். இதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

தனஞ்சய டி சில்வா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் சிறப்பாக செயற்படுகின்றனர். தனஞ்சய டி சில்வாவுக்கு நல்ல திறமை உள்ளது.

தேர்வுக் குழு எவ்விதத்திலும் அழுத்தம் கொடுக்கவில்லை. எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் எவ்வித சர்வதேச போட்டிகளும் இல்லை. எனவே தான் தற்போது ஓய்வு பெறமுடிவெடுத்தேன்.

எஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான தேசிய அணி இளம் வீரர்களைக் கொண்டே காணப்படுகின்றது. அணியை முன்னெடுத்து செல்வது ஏஞ்சலோவுக்கு பாரிய சவாலாகும்.

இந்நிலையில், சிரேஷஷ்ட வீரர்கள் யாரும் அணியில் தற்போது இல்லை. சந்திமால் மாத்திரமே அனுபவ வீரராக உள்ளார்.

இலங்கை அணி தனது பின்னடைவில் இருந்து மீண்டு எழுவதற்கு சிறிது காலம் எடுக்கும். இலங்கையில் பிரிமியர் லீக் போன்ற இருபது20 போட்டிகளை நடத்தினால் திறமையான வீரர்களை இனம் கண்டு கொள்ள முடியும்.

அணி வீரர்கள் தவறுகள் செய்யும் போது அவர்கள் மீது கோபம் கொள்ளாது உற்சாகப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும். இதன் மூலம் வீரர்கள் தமது திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள்.

எமது அணியில் முக்கிய பிரச்சினை ஒன்று உள்ளது. அணியில் அடித்து ஆடுமளவிற்கு எந்த வீரர்களும் இல்லை.

அடித்து ஆடுவதற்கு பலம் தேவை. ஏனைய நாட்டு அணிகளிலும் இந்த பிரச்சினை உள்ளது.

இதேவேளை, அரசியல் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. அரசியல் தெரியாமல் அதற்குள் காலடி எடுத்து வைத்து துன்பத்துக்குள்ளானவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.

இனம் மதம், பேதம் இல்லாமல் எனக்கு ஆதரவு உள்ளது. இதை இல்லாமல் செய்துகொள்ள எனக்கு விருப்பம் இல்லை. அரசியல்வாதி என்ற பெயர் இல்லாமல் கூட என்னால் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.