அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி!!

411

eng

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது 20-20 போட்டியில் ஹேல்ஸ் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, இங்கிலாந்து அணி 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இதன்மூலம் தொடரை கைப்பற்ற நினைத்த அவுஸ்திரேலிய அணி ஏமாற்றம் அடைந்தது. இங்கிலாந்து சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 20-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

முதல் 20-20யில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி செஸ்டர்- லீ-ஸ்டீரிட்டில் நடந்தது. நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது.

இங்கிலாந்து அணிக்கு லம்ப், ஹேல்ஸ் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. வட்சன் ஓவரில் லம்ப் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். தன் பங்கிற்கு ஜோன்சன் பந்துவீச்சில் ஹேல்ஸ் தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து பால்கனர் ஓவரிலும் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 111 ஓட்டங்களைச் சேர்த்தபோது, லம்ப் 43 ஓட்டங்களில் வெளியேறினார். பின் வந்த ரைட் (30), மோர்கன் (20) நீடிக்கவில்லை. ஹேல்ஸ் 94 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். முடிவில், இங்கிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ஓட்டங்க எடுத்தது.

அவுஸ்திரேலிய அணிக்கு கடந்த முறை உலக சாதனை படைத்த பின்ச் (5) இம்முறை ஏமாற்றினார். பிராட் ஓவரில் வார்னர் இரண்டு பவுண்டரி விளாசினார். ஆனால், பின் வந்த வாட்சன் (7), மார்ஷ் (13) விரைவில் வெளியேறினர்.

அரை சதம் கடந்த வோனர் 53 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பெய்லி (23), வேட் (4), மேக்ஸ்வெல் (27) நிலைக்கவில்லை. மற்றவர்கள் சொதப்ப, அவுஸ்திரேலிய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 168 ஓட்டங்களை எடுத்து தோல்வியடைந்தது. இங்கிலாந்தின் ஹேல்ஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இதன் மூலம் 20-20 தொடர் 1-1 என சமநிலையானது.