தொடுகை முறைமை மூலம் இயங்கும் கையடக்கத்தொலைபேசிகள் தவறி நிலத்தில் விழும் போது அவற்றின் கண்ணாடித் திரை உடைவதனால் பயன்பாட்டாளர்கள் அதனைச் சீர்செய்ய பெரும் செலவை எதிர்கொள்வது வழமையாகவுள்ளது.
இதன்போது பல சந்தர்ப்பங்களில் கையடக்கத் தொலைபேசிகள் முழுமையாக செயலிழந்து பாவனைக்கு உதவாத நிலையை அடைவதும் வழமையாகவுள்ளது.
இந்நிலையில் மேற்படி பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாக பிரித்தானிய சஸெக்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஒக்ஸ்போர்ட்டை அடிப்படையாகக் கொண்ட எம் – ஸ்லோவ் நுண்மின் நிறுவனம் என்பவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கீழே விழுந்தால் உடையாத கையடக்கத்தொலைபேசித் திரையை உருவாக்கியுள்ளனர்.
தற்போது பாவனையிலுள்ள கையடக்கத் தொலைபேசிகளின் தொடுகையுணர்வுடைய திரைகளுடன் ஒப்பிடுகையில் 5 மடங்கு செலவில் உருவாக்கப்படும் இந்தத் திரைகளை 2018 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பாவனைக்கு விட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்தத் திரையை கையடக்கத்தொலைபேசிகளுக்கு மட்டுமல்லாது தொலைக்காட்சிகள் மற்றும் டப்லட் கணினிகள் என்பவற்றுக்கும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொடுகையுணர்வுடைய திரைக்கான மின்வாய்கள் தற்போது விலையுயர்ந்த இன்டியம் தகர ஒட்சைட்டைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேற்படி விஞ்ஞானிகள் மனித கேசத்துடன் ஒப்பிடுகையில் 10,000 இல் ஒரு மடங்கு விட்டமுடைய வெள்ளி நுண் இணைப்பு மற்றும்
உலகின் மிகவும் மெல்லிய மூலக் கூறான கிராப்பீன் ஆகியவற்றைப் பயன்படுத்தி கலப்பு மின்வாய்களை உருவாக்கியுள்ளனர்.