ஜப்பானிய ரயில் ஒன்றின் சாரதி, ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக ரயில் பாதையிலேயே சிறுநீர் கழித்தமைக்காக ஜப்பானிய ரயில் சேவை நிறுவனமொன்று மன்னிப்புக் கோரி யுள்ளது.
டோக்கியோவுக்கு தென் கிழக்கிலுள்ள சிபுபா நகரின் ரயில் நிலையமொன்றில் கடந்த திங்கட்கிழமை ரயில் ஒன்று நிறுத்தப்பட்டபோது அதன் சாரதி, ரயில் என்ஜினின் கதவை திறந்து வைத்துவிட்டு தண்டவாளத்திலேயே சிறுநீர் கழித்தார்.
50:60 வயதான மேற்படி சாரதியிடம் இது தொடர்பாக விசாரித்தபோது, கழிவறைக்குச் சென்றால் ரயிலை உரிய நேரத்துக்குப் புறப்படச் செய்வதில் தாமதம் ஏற்படலாம் என்பதால், அவசரமாக தண்டவாளத்தில் சிறுநீர் கழித்ததாக அவர் கூறினார்.
இச் சம்பவம் தொடர்பாக மேற்படி ரயில் சேவையை நடத்தும் ஜப்பான் ரயில்வே குழும நிறுவனத்தின் ஓர் அங்கமான ஜே.ஆர். ஈஸ்ட் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
இயற்கை உபாதைகளை தீர்ப்பதற்கு கழிவறையை பயன்படுத்துமாறு அச் சாரதி அறிவுறுத்தப்பட்டுள்ளார் என ஜே.ஆர்.ஈஸ்ட் நிறுவனம் நேற்று தெரிவித் துள்ளது. இச் சாரதி தண்டிக்கப்படுவாரா என்பது குறித்து அந் நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை.






