மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கல்குடா கடலில் நீராடச் சென்ற சமயம் கடலில் மூழ்கி காணாமல் போன இரு சகோதரர்களின் சடலங்களும் நேற்றுக் காலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நீராடச் சென்று காணாமல் போனவர்களில் சண்முகம் சதீஷ்குமார் (21) என்பவரதும் இவரின் இளைய சகோதரரான சுரேஷ்குமார் (18) என்பவரதும் சடலங்களே நேற்று மீட்கப்பட்டன.
இதேவேளை, தங்களது பிள்ளைகள் கடலில் மூழ்கி இறந்துள்ள தகவலை அறிந்து அவர்களின் பெற்றோரான கல்குடா பட்டியடிச்சேனை கிராமத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சண்முகம் (49) கணபதிப்பிள்ளை யோகலெட்சுமி (46) ஆகியோர் வீட்டு முற்றத்திலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர்.
தூக்கில் தொங்கி மரணமடைந்த வேலுப்பிள்ளை சண்முகம் தம்பதியினருக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளுமாக நான்கு பிள்ளைகள். அதில் ஒரு பெண் பிள்ளை நான்கு வருடங்களுக்கு முன் மரணமடைந்திருந்தார்.
கல்குடா விஷ்ணுகோயில் குறுக்கு வீதி பட்டியடியைச் சேர்ந்த மேற்படி இரு சகோதரர்களும் மற்றும் மூன்று நண்பர்களுமாக ஐவர் பிறந்த தினத்தை கடற்கரையில் கொண்டாடுவதற்காக பாசிக்குடா கடலுக்குச் சென்று அவர்களில் நால்வர் நீராடிக் கொண்டிருந்த சமயம் சுரேஷ்குமார் என்பவர் கடலலையால் அள்ளுண்டு கொண்டு செல்லப்பட, சகோதரனான சதீஷ்குமார் அவரைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார்.
அவ்வேளையில் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதன் பின்னர் மற்றைய இரு நண்பர்களும் நீரில் மூழ்கிய நிலையில் மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
கடலில் மூழ்கி காப்பாற்றப்பட்ட மாணவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை, காணாமல் போன தனது சகோதரர்களில் ஒருவரின் சடலம் கடற்கரையில் வைக்கப்பட்டிருப்பதை பார்த்த சகோதரி மயங்கி வீழ்ந்த நிலையில் உறவினர்களால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.








