பாகிஸ்தானைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது வாழ்க்கையில் நூறு தடவையாக சத்திரசிகிச்சை செய்துகொண்டுள்ளார். 25 வயதான பௌஸியா யூசுப், இந்த யுவதியின் 100 ஆவது சத்திரசிகிச்சை லாகூர் நகரிலுள்ள ஷேக் ஸயீட் வைத்தியசாலையில் அண்மையில் நடத்தப்பட்டது.
இவர் சிறு வயதிலிருந்து “பைப்ரோமேட்டோசஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். “நான் இன்னும் பல சத்திரசிகிச்சை செய்துகொள்வதற்கும் தயார். ஆனால், எனது இடது கையை துண்டிப்பதற்கு அனுமதிக்க மாட்டேன்” என பௌஸியா யூசுப் தெரிவித்துள்ளார்.
இவரின் இடது கையானது “பைப்ரோமேட்டோசஸ்” நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. “இந்நோய் உடலின் ஏனைய பாகங்களுக்குப் பரவுவதை தடுப்பதற்காக எனது இடது கையை துண்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், கையில்லாமல் வாழ்வதைவிட நான் இறப்பதற்குத் தயார். வாழ்க்கையில் நான் ஒரு போராளி. ஆனால், கையில்லாமல் நான் வாழ விரும்பவில்லை” என பௌஸியா யூசுப் கூறுகிறார்.
“8 வயதில் எனக்கு முதல் தடவையாக சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. வைத்தியசாலைகள், குறிப்பாக ஷேக் ஸயீட் வைத்தியசாலை, எனது இரண்டாவது வீடு போன்றதாகும். இவ் வைத்தியசாலையில் எனக்குப் பலர் நண்பர்களாகி விட்டனர். அவர்கள் என் மீது அதிக அக்கறை காட்டுகின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
5 பிள்ளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவதாகப் பிறந்தவர் பௌஸியா. இவரின் குடும்பத்தில் ஏனைய பலரும் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனராம்.
“எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மாதாந்தம் 15,000 பாகிஸ்தான் ரூபா (சுமார் 21 இலட்சம் இலங்கை ரூபா) மருத்துவத்துவத்துக்காக செலவாகுகிறது. இவ் விடயத்தில் எமக்கு உதவும் நன்கொடை யாளர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்” எனவும் பௌஸியா யூசுப் தெரிவித்துள்ளார்.






