வவுனியா நொச்சிமோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள பாலத்துக்கு அண்மையில் A9 வீதிக்கு அருகில் காணப்படும் பயன்தரும் பனை வடலிகள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன.
வவுனியாவில் மிகவும் பிரபலமான வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு (OUTDOOR SHOOTING) பெயர்போன இடங்களில் முதன்மையாக விளங்கும் இந்த நோச்சிமொட்டை பாலத்துக்கு அண்மையில் காணப்பட்ட பனை வடலிகள் தான் புதர்கள்பற்றைகளுக்கு தீவைக்கும் நபர்களின் பொறுப்பற்ற செயல்களால் தீயில் கருகியுள்ளன.
தமிழர் வாழ்வோடு ஒன்றிப்பிணைந்துள்ள இந்த பனைமரங்களது பயன்களை அறியாத ஒரு சில மனிதர்கள் செய்கின்ற செயல்களால் பல்லாண்டுகாலம் பயன் தரக்கூடிய பனைமரங்கள் அழிக்கப்படுவது வேதனைக்குரிய விடயமாகும் .
சம்பந்தப்பட்ட தரப்புக்களான பனை தெங்கு அபிவிருத்திச்சபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, பிரதேச செயலகம் வவுனியா , மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புகள், பசுமை இயக்கம் என்பன ஒன்றிணைந்து பனை வளம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தி வவுனியாவின் பனை வளத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கின்றோம்.
வயல் நிலங்கள், புல்வெளிகள் என்பவற்றின் மீது தீ வைக்கின்ற காணி அல்லது வயல் நிலங்களின் உரிமையாளர்களுக்கு போதுமான சுற்று சூழல் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை விவசாய அல்லது கமக்கார அமைப்புக்களின் ஊடாக வழங்குமாறும் கேட்டுகொள்கின்றோம்.
இயற்கை வளத்தை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
-பண்டிதர்-