தாயின் காதலனால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தினால் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ளுமாறு தாயிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த 16 வயது சிறுமியை மீண்டும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை கைது செய்வதற்காக விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தனது மனைவியையும், மகளையும் கைவிட்டுவிட்டுச் சென்றுள்ளதோடு, சிறுமியின் தாய் அதன்பின்னர் வேறொருவருடன் தொடர்பு வைத்துள்ளார்.
அந் நபரால் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார் என்ற முறைப்பாட்டையடுத்து அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னர் குறித்த சிறுமியை கவனமாகப் பாதுகாக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டு அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தானும் மகளும் வேறு பிரதேசத்தில் வசிப்பதற்குச் சென்றதாகவும் கடந்த இரண்டு மாதங்களாக அயல் வீட்டுக்காரர் ஒருவர் மகளை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் சிறுமியின் தாய் முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.






