தந்தை இறந்த செய்தி கேட்டும் பரீட்சை எழுதிய மகள் : நெஞ்சை உலுக்கும் உண்மைச் சம்பவம்!!

521

1

இந்தியாவின் உரி ராணுவ முகாமில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இந்திய ராணுவவீரர்கள் பலியானார்கள்.

அதில் வீரர் சுனில் குமார் வித்யார்த்தியும் ஒருவர், அப்படி தன் தந்தை இறந்த செய்திகேட்டு இதயம் உடைந்த நிலையிலும் அவருடைய மகள்கள் பள்ளியில் அன்றைய தேர்வை வந்து எழுதினார்கள்.

அது அவர்கள் குடும்ப தைரியமாக பாராட்டப்பட்டாலும் பார்த்தவர்களும் கேட்டவர்களும் அதை தாங்கும் தைரியமில்லாமல் உருகினர்.

உருக்கமான தேர்வு

சுனில் குமார் வித்யார்த்திக்கு இரண்டு வயது மகன் உட்பட ஆர்த்தி, அன்ஷூ, ஆன்ஷிகா என மூன்று மகள்கள் உள்ளனர். இந்த மூன்று மகள்களும் கயாவில் உள்ள டிஏவி பள்ளியில் படிக்கின்றனர்.

சம்பவத்தன்று ராணுவப்பணியில் இருந்த தங்கள் தந்தை இறந்ததாக அதிர்ச்சியான செய்தி கிடைத்தது. அதற்கு வருந்தினார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை, அது எல்லோருக்கும் உள்ள இயல்புதான்.

ஆனால், அதன் பிறகும் அன்று பள்ளியில் பரீட்சை நாளாக இருந்ததால் அதை ஒதுக்க மனமில்லாமல் தைரியத்தோடு வந்து மூன்று மாணவிகளுமே வீட்டின் அனுமதியோடு தேர்வு எழுதினார்கள்.

நிகழ்காலத்தில் நேரும் எந்த துன்பத்தையும் தாங்கிக்கொண்டு எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் மனோதிடத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.

பள்ளியில் இந்த மூன்று பேருக்கும் மற்ற மாணவர்களோடு அல்லாமல் தனிப்பட்ட முறையில் தேர்வு நடத்தப்பட்டது. இது பள்ளியும் தேசபக்திக்கு தலைவணங்கிய செயல்.

மகளின் மனநிலை

சுனில் குமாரின் மூத்த மகள் அப்போது இந்து நாளிதழுக்கு கூறியது, என் தந்தையை நினைத்து பெருமையடைகிறேன். அவருடைய மரணம் வெறும் இறப்பு அல்ல ஒரு உயிர்த்தியாகம். பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் திடீர் திடீரென வந்து தாக்குதல் நடத்திவிட்டு செல்கின்றனர். இந்தியாவும் அதற்கு பழிக்குப்பழி வாங்க வேண்டும் அப்போதுதான் பாகிஸ்தானின் பயங்கரவாத போக்கை சீர்படுத்த முடியும் ஆதங்கத்தோடு கூறினார்.

ஆனாலும், பயங்கரவாதிகள் தாங்கள் அழிவதற்கும் தயாராக இருந்துகொண்டு, அமைதியாக வாழ்பவர்களின் நிம்மதியை கெடுப்பதுதானே அவர்களின் கொள்கையை செயலாக்கும் வழியாக நினைக்கின்றனர்.

சுனில்குமாரின் வாக்குறுதிகள்

சுனில் குமார் தன் மனைவி கிரண் தேவியுடன் கயாவில் வசித்து வந்தார். அவர் 1998 ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.

அவர் இந்த ஆண்டின் தசரா பண்டிகைக்கு வீட்டுக்கு வருவதாக கூறியுள்ளார். இறப்பதற்கு முதல் நாள் சனிக்கிழமை குடும்பத்தினரோடு போனில் பேசியுள்ளார்.

மேலும், விடுமுறை காலத்தில் வீட்டுக்கு வரும்போது, மூதாதையர் வீட்டை பழுது பார்ப்பதாக அவருடைய தந்தை மதுரா யாதவிடம் வாக்குறுதியும் அளித்திருந்தார்.

மோடியின் பதிலடி சூசகம்

சுனில்குமார் பணியாற்றிய ராணுவ பிரிவான 12 வது அணித்தலைமையகம் உரியில் அமைந்துள்ளது. இது ஸ்ரீநகரிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ளது.

கடந்த ஞாயிறன்று, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 பேர் பலியாகினர், 32 பேருக்கு மேல் படுகாயமடைந்தார்கள். தீவிரவாதிகளில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இது அதிக உயிர்ச்சேதத்தை கொடுத்த ஒரு பெரிய பாதிப்பாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ராணுவ முகாமுக்கு உரிய வீட்டுவசதி பகுதிக்குள் நுழைந்த ஜிகாதி தீவிரவாதிகள் நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்றும் மூலோபாய திட்டத்தோடு செயல்பட்டிருப்பதும் தெரியவருகிறது.

அவர்கள் துப்பாக்கியால் சுட்டது மட்டுமல்லாமல், கையெறி குண்டுகளாலும், டீசல் குண்டுகளாலும் முகாமையே தீக்கிரையாக்கினர். தீப்பிடித்த கூடாரங்களின் உள்பக்கத்தில் இருந்த 13 பேர் இறந்ததுதான் பலியை எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தது.

இந்த தாக்குதல் தண்டிக்கப்படாமல் விடப்படாது என்று பிரதமர் மோடி தனது எண்ணத்தை சூசகமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தீர்வில்லாத தீவிரவாதம்

தன் நாட்டுக்காக போரில் காயம்பட்டு ஊனமடைந்த வீரனை, இனி பயனில்லை என அந்த ராணுவமே ஒதுக்குகிறது.

தியாக மரணமானாலும் கணவனை இழந்த மனைவியையும் தந்தையை இழந்த பிள்ளைகளையும் இந்த உலகம் உதாசினப்படுத்தவே செய்யும்.

ராணுவ மரியாதையோடு உடலை நல்லடக்கம் செய்வதாலும், வீரம், தேசபக்தி, தியாகம் என்று வந்தவர்கள் ஒருநாள் புகழ்வதாலும் அது அந்த குடும்பத்தினரை இறுதிவரை அரவணைக்காது.

தாக்குதல் வீரம், வென்றாலும் வீழ்ந்தாலும் எதோ ஒரு பக்கத்தில் அழிவுதான்.

2