மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி நீர் இறைக்கும் இயந்திரம் கண்டுபிடிப்பு!!

613

water

வாழைச்சேனை பிரதேசத்தின் மருதநகர் பகுதியைச் சேர்ந்த வீரக்குட்டி ஜெயராஜ் என்பவர் புதிய தொழில் நுட்பத்தின் மூலம் மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளமை தொடர்பாக ஊடக சந்திப்பு வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது பிரதேச செயலாளர் வா.வாசுதேவன், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நிரூபா பிருந்தன், கண்டுபிடிப்பாளர் வீரக்குட்டி ஜெயராஜ் மற்றும் செயலக உத்தியோகத்தர்கள், நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இவ் இயந்திரமானது மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி மனிதவலு மூலம் இயங்கி 150 லீற்றர் நீர்த்தாங்கிக்கு ஏற்றி அதன் பின்பு தானாக இயங்கும்.

அதாவது பாவனையாளர் அதனை பாவிக்கும் போது சமையலறை, குளியலறை அல்லது வேறு இடமோ பாவிக்கும் போது நீர் இறைக்கும் இயந்திரம் தானாகவே சுழன்று நீரை தாங்கிக்கு ஏற்றும்.

இந்த நீர் இறைக்கும் இயந்திரம் வீட்டுப் பாவனைக்கு மட்டுமின்றி விவசாயத்திற்கும் தோட்ட செய்கைக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

இந்த நீர் இறைக்கும் இயந்திரம் முதலில் மனிதவலு மூலம் இயங்கியது.

அதாவது 2004.11.25ம் திகதி வடக்கு கிழக்கு கைத்தொழில் திணைக்களத்தினால் மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் நடாத்தப்பட்ட கைத்தொழில் கண்காட்சியில் மாகாண மட்டத்தில் முதலாது பரிசும், சான்றிதழும் கண்டுபிடிப்பாளர் வீரக்குட்டி ஜெயராஜிக்கு வழங்கப்பட்டது.

கண்டுபிடிப்பாளர் வீரக்குட்டி ஜெயராஜ் வடக்கு கிழக்கு கைத்தொழில் துறை பணிப்பாளரால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவ் நீர் இறைக்கும் இயந்திரம் தற்போது 100க்கும் 95 வீதமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. 5 வீதம் பாதுகாப்பு கருதி மறைக்கப்பட்டுள்ளது.

மறைக்கப்பட்ட 5 வீத தொழில் நுட்பமானது இவ் நீர் இறைக்கும் இயந்திரத்தை பெற்றுக் கொள்ளும் நிறுவனத்திடம் கூறப்படும் என கண்டுபிடிப்பாளர் வீரக்குட்டி ஜெயராஜ் தெரிவித்தார்.

இதன் பிற்பாடு தனது சொந்த பாவனைக்காக பாவித்துக் கொண்டிருந்த வேளை நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்தேன்.

இதன் காரணமாக இயந்திரத்தின் சில பாகங்கள் சேதமடைந்து காணப்பட்டிருந்தது. பின்னர் இந்த நீர் இறைக்கும் இயந்திரத்தை தயாரிக்க தனது சில நண்பர்களின் உதவி மூலம் மீண்டும் இயந்திரத்தை உருவாக்கினேன் என்றார்.

இவ் இயந்திரமானது 50 அடி ஆழத்தில் இருந்து 50 அடி உயரத்திற்கு நீரை உறிஞ்சி நீர் தாங்கிக்கு ஏற்றும் திறன் மிக்கது.

அத்தோடு நீர் இறைக்கும் இயந்திரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ளும் பட்சத்தில் குறித்த இயந்திரத்தை கச்சிதமாகவும் அளவில் சிறியதாகவும் குதிரை வலுவினையும் அதிகரித்து கொள்ள முடியும் என்றார்.

இவ்வாறு பல கண்டு பிடிப்புக்கள் என்னிடம் உள்ளதாகவும், மேலும் தன்னிடம் பல கண்டுபிடிப்புக்களை மேற்கொள்வதற்கு போதிய நிதி வசதியின்மை காணப்படுகின்றது.

எனவே உதவும் உள்ளம் கொண்டவர்கள் தனக்கு உதவிகளை வழங்கி எனது கண்டுபிடிப்புக்களை மென்மேலும் வளர்க்க உதவுமாறு வேண்டுகின்றேன் என்றார்.

இத்திட்டம் மற்றும் இவருடம் தொடர்பு கொள்வதாயின் 0773426800 அல்லது 0758863497 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.