நொக்கியா நிறுவனத்தை 43,000 கோடிக்கு வாங்கும் மைக்ரோசொப்ட்!!

697

nokia

உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான நொக்கியாவை மைக்ரோசொப்ட் நிறுவனம் 43,000 கோடிக்கு வாங்கவுள்ளது.

செல்போன் விற்பனையில் உலகில் முதலிடத்தில் இருந்த நொக்கியாவை சாம்சங் போன்ற நிறுவனங்கள் பின் தள்ளிவிட்டன. மிக வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்துக்கு இணையாக நொக்கியா தன்னை மாற்றிக் கொள்ளாததால் சாம்சங், சொனி , அப்பிள் போன்ற சர்வதேச நிறுவனங்களும், மைக்ரோமேக்ஸ் போன்ற உள்நாட்டு நிறுவனங்களும் நோக்கியாவின் சந்தையை ஆக்கிரமித்துவிட்டன.

குறிப்பாக ஸ்மார்ட்போன் சந்தையில் நொக்கியா மிகவும் பின்தங்கிவிட்டது. அன்ரொய்ட் மொபைல் போன்களை சமாளிக்க 2011ம் ஆண்டில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருளை நொக்கியா தனது செல்போன்களில் புகுத்தியது.

இது ஓரளவுக்கு நொக்கியாவுக்கு உதவினாலும் பெரிய அளவில் விற்பனையை அதிகரிக்க இந்தத் திட்டம் உதவவில்லை. இந் நிலையில் கடும் நெருக்கடியில் உள்ள நொ க்கியாவை வாங்க மைக்ரோசொப்ட் முடிவு செய்துள்ளது.

அப்பிள் போன்ற மென்பொருள் பின்னணியைக் கொண்ட நிறுவனங்களே நேரடியாக போன்களைத் தயாரித்து வெற்றி கண்டதையடுத்து அதே வேலையில் கூகுள் நிறுவனமும் இறங்கியுள்ளது. விரைவிலேயே கூகுள் போன்கள் உலகளவில் வலம் வரவுள்ளன.

இந் நிலையில் அதே வழியில் பயணிக்க முடிவு செய்துள்ள மைக்ரோசொப்ட் இதன் முதல் படியாக உலகின் மாபெரும் செல்போன் நிறுவனமான நொக்கியாவை வாங்க முடிவு செய்துள்ளது.

மேலும் நொக்கியா நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனரான ஸ்டீபன் எலோப் மீண்டும் மைக்ரோசொப்டிலேயே இணைவார் என்றும் தெரிகிறது. இவர் மைக்ரோசொப்டில் இருந்து தான் நொக்கியாவுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசொப்ட்டின் இப்போதைய தலைவரான பால்மர் விரைவில் பதவி விலக உள்ள நிலையில், ஸ்டீபன் எலோப் மைக்ரோசொப்ட்டின் தலைவாரகவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.