பெங்களூருவில் பள்ளி மாணவர்களை பெண் நடத்துனர் ஒருவர் சரமாரியாக கடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரில் அரசுப்பேருந்து ஒன்று ஜலகல்லியிலிந்து கே.ஆர் புரத்திற்கு சகபயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.
இதில் பேருந்து நிற்கும் ஒவ்வொரு பகுதிகளிலும் பயணிகள் ஏறவும், இறங்கவுமாக இருந்துள்ளனர். அப்போது பயணிகள் இறங்கும் போது படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் சிலர் இருந்துள்ளனர். அது பயணிகளுக்கு இடையூறாக இருந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பேருந்து புறப்படும் போது படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்துள்ளனர். இதனால் பேருந்தின் பெண் நடத்துனர், மாணவர்களை உள்ளே வரும்படி கூறியுள்ளார். ஆனால் மாணவர்களோ உள்ளே வருவதற்கு மறுத்துள்ளனர்.
நடத்துனருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. வார்த்தை போர் முற்றியதால் பேருந்து கங்கமன்னாகுடியில் நிறுத்தப்பட்டது.பேருந்தை விட்டு மாணவர்களும், பெண் நடத்துனரும் கிழே இறங்கியுள்ளனர். சாலையில் வாக்குவாதம் நடைபெற்றதால் பொலிசார் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்தனர். பொலிசார் கூறியும் சமரசம் ஏற்படாததால் பெண் நடத்துனர், அங்கிருந்த சக மாணவர்களை கண்மூடித்தனமாக கடிக்கத் தொடங்கினார்.
வலியை பொறுக்க முடியாத மாணவர்கள் நடத்துனரை கீழே தள்ளிவிட்டனர். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற நடத்துனர் மீண்டும் மாணவர்களை கடிக்கத் தொடங்கினார்.போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் இச்சம்பவம் நடந்துள்ளதால், இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.