முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அதிகாரப் பூர்வமற்றதகவல் ஒன்று வெளியாகி உள்ளது.முதல்வர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தும் அவருக்கு இருந்த காய்ச்சல் குணமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்கப்பட்டது. தொடர்ந்து, இதயத்தின் சீரான இயக்கத்திற்காக, கருவி பொருத்தப்பட்டுள்ளது.
தற்போது, அனைத்து விதமான சிகிச்சை முடிந்து, மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். உடல் நிலை நன்றாக உள்ளது. ஓரிரு நாளில், மருத்துவ கண்காணிப்பு முடிந்து விடும். அதன் பிறகே, அவர் வீடு திரும்புவது குறித்து முடிவு செய்யப்படும்.இவ்வாறு அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதை உறுதிப்படுத்த அரசு தரப்பும், மருத்துவமனை வட்டாரமும் மறுத்து விட்டன.
முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், வீணை காயத்ரி விசேஷ வழிபாடு நடத்துகிறார். தமிழ்நாடு இசை பல்கலை துணைவேந்தரான அவர், 11ம் திகதி விஜயதசமி அன்று, அம்மன் சன்னிதியில் வீணையை மீட்டி நோய் தீர்க்கும் ராகம் இசைக்கிறார்.
சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி, அதிமுகவினர் பல்வேறு விதமான வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.அந்த வரிசையில், வீணை காயத்ரி இந்த வேண்டுதலை நிறைவேற்றுகிறார்.