சுவிட்சர்லாந்து நாட்டில் சாலை விபத்து ஏற்படுத்திவிட்டு பொலிசாரிடம் நாடகமாடிய இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
துர்கவ் மாகாணத்தில் உள்ள Busswil என்ற நகரை சேர்ந்த பொலிசாருக்கு நேற்று முன் தினம் மாலை நேரத்தில் தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அதில், ‘சாலையில் ஒரு கார் விபத்துக்குள்ளாகி தலைகீழாக கவிழ்க்கப்பட்டுள்ளதாக’ ஒரு இளைஞன் தகவல் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு யாரும் இல்லை. ஆனால், கார் ஒன்று தலைகீழாக கவிழ்க்கப்பட்டு இருந்துள்ளது. காரின் அடையாள எண் மூலம் உரிமையாளரை கண்டுபிடித்த பொலிசார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
வீட்டில் 18 வயதான இளைஞன் ஒருவர் இருந்துள்ளார். காரின் சாவி தொலைந்து விட்டதாகவும், அதன் பிறகு தனது காரை யாரோ ஒரு மர்ம நபர் திருடி விட்டதாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
ஆனால், நபரிடம் நடத்திய கடுமையான விசாரணையில் அவர் அனைத்து உண்மையையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
காரை அந்த இளைஞன் ஓட்டியபோது விபத்து ஏற்பட்டதாகவும், பொலிசாரிடம் இருந்து தப்பிக்க காரை அங்கேயே விட்டுவிட்டு யாருக்கும் தகவல் அளிக்காமல் வீட்டிற்கு திரும்பி விட்டதாக அந்த இளைஞன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சாலை விபத்து ஏற்படுத்தியது மற்றும் பொலிசாரிடம் உண்மையை மறைத்து நாடகமாடிய குற்றங்களுக்காக அந்த இளைஞன் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






