சச்சின் இடத்தை கோலியால் நிரப்ப முடியாது : கிறிஸ்டன்!!

320

Gayr_Kirsten_Vivek__521838g

ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆபிரிக்காவின் கிறிஸ்டன் நியமிக்கப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கரி கிறிஸ்டன்.

தென் ஆப்ரிக்காவை சேர்ந்த இவரது பயிற்சியில் இந்திய டெஸ்ட் அணி நம்பர்-1 இடத்துக்கு முன்னேறியது. 2011ல் சொந்த மண்ணில் இந்திய அணி உலக கிண்ணம் வென்றது.

இதன் பின் தென் ஆப்ரிக்க அணிக்கு பயிற்சியாளராக சென்று அந்த அணியை டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற வைத்தார். கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் பதவி விலகிய இவர் தற்போது ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

தற்போதுள்ள எரிக் சைமன்ஸ் உதவி பயிற்சியாளராக செயல்படவுள்ளார். கடந்த ஆறாவது தொடரில், 8வது இடம் பெற்ற டெல்லி அணி கிறிஸ்டன் பயிற்சியில் கிண்ணம் வெல்லும் என்று நம்பப்படுகிறது.

இது குறித்து 45 வயதான கிறிஸ்டன் கூறுகையில் இது சவாலான பணி தான். என்னை ஒப்பந்தம் செய்ய எரிக் சைமன்ஸ் தான் பரிந்துரை செய்தார். என் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புகிறேன்.

எனவே தான் ஆண்டுக்கு மூன்று மாதம் மட்டும் பணி புரியும் ஐ.பி.எல் தொடருக்கு முன்னுரிமை அளித்தேன். இதில் வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வர முயற்சிப்பேன்.

ஐ.பி.எல் தொடரில் அடுத்தடுத்து போட்டிகள் இருக்கும். இதற்கேற்ப அணியை தயார் செய்ய வேண்டும் என்றும் இதற்கு இந்தியாவில் ஏற்கனவே பணிபுரிந்த அனுபவத்தின் அடிப்படையில் சில வீரர்களை அணியில் இடம்பெற செய்வேன் எனவும் கூறினார்.

வீராட் கோலி குறித்து கிறிஸ்டன் கூறுகையில் இவர் அபூர்வமான திறமை படைத்தவர். பெரிய வீரராக வருவார் என்று தொடக்கத்திலேயே நம்பினேன். சில ஆண்டுகளில் பெரியளவில் வளர்ச்சி பெற்றுள்ளார்.

இவர் சச்சின் இடத்தை நிரப்புவார் என கூற முடியாது என்றும் சச்சின் இடத்துக்கு ஒருவரை பரிந்துரை செய்வது கடினமான செயல் எனவும் கூறினார்.