சிரியா மீதான தாக்குதலுக்கு பான் கி மூன், புடின் எச்சரிக்கை!!

351

UN-Secretary-General-Ban-Ki-moon

சிரியா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிரியா அரசப்படைகள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி அப்பாவி குழந்தைகள் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்களை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனையடுத்து அமெரிக்கா தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது.
அமெரிக்காவின் நட்பு நாடுகளான இஸ்ரேலும், பிரான்ஸும் இந்த இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

இந்நிலையில் சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் சிரியா மீது முழு அளவிலான போர் நடவடிக்கையை வலியுறுத்தும் விதமாக இந்த தீர்மானம் இருக்கிறது என்று சில எம்.பி.க்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து தற்போது அந்த தீர்மானத்தை அமெரிக்காவின் வெளிநாட்டு உறவுகளுக்கான எம்.பி.க்கள் குழு மாற்றியுள்ளது.
அதாவது சிரியா மீதான ராணு தாக்குதலுக்கான காலக்கெடுவை 60 நாட்களாக்கியிருக்கிறது. சிரியாவில் உடனடியாக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளாது என்றும் அதில் திருத்தப்பட்டிருக்கிறது.

பான் கி மூன் எச்சரிக்கை..

ரசாயன குண்டு வீச்சு தொடர்பாக சிரியா மீது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் அனுமதி பெறாமல் ராணுவ தாக்குதல் நடத்த கூடாது. அதனால் குழப்பமும், ரத்தம் சிந்த வேண்டிய நிலையும் ஏற்படும்.

ரசாயன குண்டு வீசியது குறித்து ஐ.நா. கண்காணிப்பாளர்கள் ஆய்வில் உறுதி செய்யப்பட்டால் சிரியா அரசு மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏனெனில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது சர்வதேச போர் விதிமுறைகளுக்கு எதிரான குற்றமாகும் என்று தெரிவித்துள்ளார்.

புடின் எச்சரிக்கை..

சிரியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது என்பதற்கான ஆதாரம் இருந்தால் அதை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் முன்புதான் தாக்கல் செய்ய வேண்டும்.

அதைவிட்டுவிட்டு வதந்தந்திகளின் அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார்.

அப்படி ஒரு ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் ஒப்புதல் அவசியமானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.