காத்தான்குடி பிரதேசத்தில் வளர்ப்புத் தாயால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பரபரப்பாக பேசப்பட் சிறுமி இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த யுஸ்ரி என்ற சிறுமியொருவர் அவரது வளர்ப்புத் தாயாரால் சூடு வைக்கப்பட்டு படுகாயமடைந்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
சிறுமியின் தாயார் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த நிலையில் சிறுமியின் தகப்பனாரான மஜீத் ரப்பானி இன்னொரு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்திருந்தார்.
குறித்த இரண்டாம் மனைவியே சிறுமி யுஸ்ரிக்கு சூடு வைத்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் வளர்ப்புத் தாயாரும், தகப்பன் மஜீத் ரப்பானியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, சிறுமி யுஸ்ரியை வளர்க்கும் பொறுப்பு அவரது பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
பாட்டியின் பராமரிப்பில் இருந்த சிறுமி யுஸ்ரி இம்முறை நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 155 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இது காத்தான்குடி பிரதேசத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






