கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கம், பாதுகாப்பு மற்றும் மனித உரிமை மேம்பாடு என்பவற்றை கிரமமாக வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.கொழும்பில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற 11ஆவது தென்னாசிய பிராந்திய நீதிபதிகள், வழக்குதொடுநர்கள், மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி பாசறையில் பங்கேற்ற அமெரிக்க தூதரகத்தின் பிரதி முதன்மை அதிகாரி ரொபட் ஹில்டன் இந்தக்கருத்தை வெளியிட்டார்.
இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு இணங்க மீளமைப்பதை உறுதிசெய்து வருகிறது.இதன்கீழ், கடந்த மே மாதத்தில் பலவந்தமாக காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகள் பிரகடனத்தை இலங்கை உறுதிப்படுத்தியது.
இவை, இலங்கை சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றிய சில அடைவுகளாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த சூழ்நிலையில் இலங்கையுடன் அமெரிக்கா தொடர்ந்தும் பங்காளியாக இருந்து செயற்படவுள்ளது என்றும் கூறியுள்ளார்.அத்துடன் குறித்த விடயங்களில் முன்னேற்றங்கள் ஏற்படவும் அமெரிக்கா உதவியளிக்கும் என்று ரொபட் ஹில்டன் தெரிவித்துள்ளார்.