மகளை காதலித்த நபரை திருமணம் குறித்து பேச அழைத்து பெண்ணின் தந்தை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள தேவர் குளம் கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமண பெருமாள். இவரது மகள் கஸ்தூரி நர்சிங் படிப்பை முடித்து விட்டு திண்டுக்கலில் வேலைபார்த்து வருகிறார்.
அப்போது திண்டுக்கல், நெய்காரப்பட்டியை சேர்ந்த சிவகுருநாதனுடன் கஸ்தூரிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு பின்னர் காதலாக மாறியது. இந்த சம்பவம் கஸ்தூரியின் தந்தை லெட்சுமணனுக்கு தெரியவந்தது. முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லெட்சுமணன், பின்னர் சம்மதித்துள்ளார்.
இதையடுத்து திருமண விஷயம் பேசுவதற்காக சிவகுருநாதனை கஸ்தூரியின் வீட்டிற்கு அழைத்துள்ளார். இதை நம்பி வந்த சிவகுருநாதனுடன் லெட்சுமணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த லெட்சுமணன் அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சிவகுருநாதனை வெட்டி வீழ்த்தியுள்ளார்.
அதன் பின்னர் லெட்சுமண பெருமாள் அரிவாளுடன் சங்கரன் கோவில் காவல்நிலையத்தில் சரண் அடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து லெட்சுமண பெருமாள் மீது வழக்குப்பதிவு செய்து, பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கு கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.