பெங்களூருவில், சகோதரரின் மகளை 10 ஆண்டுகளாக பாலியல் வல்லுறவு செய்து கர்ப்பத்தை கலைத்த ஹோட்டல் உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு அசோக் நகர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சீலா (வயது21, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவருடைய பெற்றோர் கடந்த 2006ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளனர். இதனால், மாலா தனது தந்தையின் சகோதரரான ராஜூ என்பவரின் கண்காணிப்பில் வளர்ந்து வந்தார். ராஜூ ஹோட்டல் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அதாவது, சீலா சிறுமியாக இருந்ததில் இருந்தே அவரை ராஜூ பாலியல் வல்லுறவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், சம்பவம் குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் அவர், சீலாவை மிரட்டியுள்ளார்.
உயிர் பயத்தில் சீலா தனக்கு நேரும் கொடூரத்தை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இதனை ராஜூ தனக்கு சாதாகமாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதற்கிடையே சீலா கர்ப்பமடைந்துள்ளார். இதனை அறிந்த ராஜூ, சீலாவின் கர்ப்பத்தை கலைத்துள்ளார்.
பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய சீலாவை மீண்டும் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். இந்நிலையிலேயே தனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று மனம் உடைந்த சீலா, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தோழியிடம் கூறி கதறி அழுதுள்ளார். இது குறித்து, அவருடைய தோழி, சீலா படித்து வரும் கல்லூரி முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து சீலாவின் சார்பில் கல்லூரி நிர்வாகம் அசோக் நகர் பொலிஸ் நிலையத்தில் ராஜூ மீது முறைப்பாடு செய்தது. அதனை தொடர்ந்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சீலா அரச பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் தனது சகோதரரின் மகளை 10 ஆண்டுகளாக வல்லுறவு செய்து கர்ப்பத்தை கலைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






