தனிக்குடித்தனத்துக்கு வற்புறுத்தும் மனைவியை கணவன் விவாகரத்து செய்ய முடியும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
1992 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட கர்நாடக தம்பதியினரின் விவாகரத்து மேல்முறையீட்டு மனுவினை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, எல்.நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு இதுபோன்ற கருத்தினை கூறியுள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, நம் நாட்டில் இந்து மதத்தை பின்பற்றும் ஒரு ஆண் அவரது தாய் தந்தையை விட்டு பிரிந்து வாழ்வது என்பது கலாச்சாரத்துக்கு எதிரானது.
அதுவும் பெற்றோர் சம்பாதிக்க முடியாத நிலையில் இருக்கும்போது மகன் அவர்களை பிரிந்து செல்லவே கூடாது. தன்னை பெற்று, அரும்பாடு பட்டு கல்வி அளித்து வளர்க்கப்பட்ட மகனுக்கு முதுமையில் பெற்றோரை பாதுகாக்கும் பொறுப்பும், கடமையும் உள்ளது.
திருமணத்துக்கு பின்னர் மனைவி கணவரின் குடும்பத்தினருடன் வாழவேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்துக்கு பிறகு மனைவி கணவரின் குடும்பத்தை சேர்ந்தவர் ஆகிறார்.
அக்குடும்ப உறுப்பினர்களின் சுக துக்கங்கள், முன்னேற்றத்தில் அவருக்கும் பங்குண்டு. எனவே உரிய வலுவான காரணம் இல்லாமல் கணவர் பெற்றோரைப் பிரிந்து தன்னுடன் தனிக்குடித்தனத்துக்கு வரவேண்டும் என மனைவி எதிர்பார்க்கக் கூடாது.
அப்படி அவர் வலியுறுத்தினால் அதுவே அவரிடமிருந்து அவரது கணவர் விவகாரத்து பெற உரிய காரணமாக அமையும். இந்த வழக்கில் மனுதாரரை அவரது மனைவி தற்கொலை செய்வதாக அச்சுறுத்தியிருக்கிறார்.
ஒருமுறை தற்கொலைக்கு முயலும்போது கடைசி நொடியில் காப்பாற்றப்பட்டிருக்கிறார். இத்தகைய சூழலில் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற தினமும் ஒரு கணவன் அச்சத்தில் வாழ்வது அவருக்கு மிகுந்த மன நெருக்கடியை ஏற்படுத்தும்.
இந்த வழக்கில் கீழ்கோர்ட் வழங்கிய விவாகரத்து உத்தரவை உறுதி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.






