ஒரு பெண்ணின் கண்ணீருக்குப் பின்னால் இவ்வளவு விடயங்களா!!

815

tears

பெண்ணின் கண்ணீர் என்பது ஆணுக்கு வேண்டுமானால் காரியங்களை சாதித்துக்கொள்ளும் கருவி போலவும், எதிரே இருப்பவரை வீழ்த்தும் ஆயுதம் போலவும் இருக்கலாம்.

பெண்ணைப் பொறுத்தவரையில் அவளின் கண்ணீர் என்பது அவளுடைய உண்மையின் மெய்ப்பாடு. அவள் மனதின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த அவளுக்குத் தெரிந்த செயல்பாடு.

இந்த சமுதாயத்தை பொறுத்தவரை, கண்ணீர் பெண்களுக்கு ஒரு ஆயுதம் என பரவலாக கூறப்படுகிறது. ஆனால் அந்த ஆயுதத்தை வைத்து பெண்கள் எத்தனை எதிரிகளை வீழ்த்தியிருக்கிறார்கள்? எத்தனை உறவுகளை தொலைத்திருக்கிறார்கள்? எத்தனை உறவுகளிடம் மண்டியிட்டு இருக்கிறார்கள்? என்பதை பெண்களின் கண்ணீர் மட்டுமே சொல்லும்.

ஒரு பெண் தனது கண்ணீரின் மூலம் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்கிறாள் என்றால், அது வெறும் கண்ணீர் சார்ந்த விடயமாக இருக்காது. அவளது உணர்வு சார்ந்த விடயமாகவே இருக்கும்.

தனது கண்ணீரை யார் முன் சிந்த வேண்டும் என்பதில் கூட பெண்கள் வரையறை வைத்திருப்பார்கள். ஒரு ஆணின் முன்னால் அழக்கூடாது என தனது மனதை இறுக்கமாக்கி கொண்டால், அதன்பின்னர் அந்த இறுக்கம் நலிவடைவது இயலாத காரியம்.

தனது கண்ணீரின் வலிமை மற்றும் அதில் உள்ள உண்மையை ஒரு பெண் மற்றுமே நன்கு அறிவாள். பல நேரங்களிலும் பெண்களின் கண்ணீர் அர்த்தமற்றது என புறந்தள்ளப்படுவதுண்டு.

தான் நேசிக்கும் ஆண், அவளது உணர்வுகளோடு விளையாடுகையில் பல்வேறு கேள்விகளை உள்ளடக்கிகொண்டு, அவனிடம் கேள்விகள் கேட்டு தன்னை வெளிப்படுத்துக்கொள்ள முடியாத நிலையில், கண்ணீரிடம் அடைக்கலம் ஆகிறாள்.

உணர்வுகள் கண்ணீராய் வெளிப்பட்ட பின்னரும் கூட, கண்ணீர் சம்பந்தப்பட்டவர் அவளை அவமதிக்கும்போது மௌனம் காத்து தன்னை மூடிக்கொள்கிறாள்.

தமிழ் இலக்கிய மரபில் எட்டு மெய்ப்பாடுகள் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளன. அவை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகியவை.

இந்த எட்டு வகையான வெளிப்பாடுகளிலும் அவள் துளியேனும் கண்ணீராகத் துளிர்த்துவிடுவாள். பெண்ணுக்கு அவளுடைய எந்த உணர்வாக இருந்தாலும் அதன் அடிப்படையான உண்மையைக் கண்ணீராகவே வெளிப்படுத்தத் தெரிகிறது.