பிரித்தானியாவில் வலிநீக்கி மருந்தான திரமடோல், ஹெரோயின் போதைப்பொருளை விடவும் அதிகளவானோரின் உயிரை பலிகொண்டு வருவதாக அந்நாட்டு முன்னணி நோயியல் நிபுணர் ஒருவர் தெரிவிக்கிறார்.
அந்த வலி நீக்கி மருந்தை மருத்துவரின் சிபாரிசுக்கமையவே வழங்க வலியுறுத்தப்பட்டுள்ள போதும் கறுப்புச் சந்தை மூலமாக அந்த மருந்தை சட்டவிரோதமாக பெறுவது அதிகரித்து வருவதாக வட அயர்லாந்தைச் சேர்ந்த நோயியல் நிபுணரான பேராசிரியர் ஜக் கிரேன் கூறினார்.
கடுமையான வலிகளைத் தணிவிக்கும் இந்த மருந்துக்கு பலரும் அடிமையாகியுள்ளதாக தெரிவித்த அவர், அந்த மருந்தை ஏனைய மருந்துகளுடன் அல்லது மதுபானத்துடன் கலந்து பயன்படுத்தும் போது அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
வட அயர்லாந்தில் கடந்த வருடத்தில் மட்டும் அந்த மருந்து பாவனையால் 16 வயது சிறுமி மற்றும் 70 வயது வயோதிபர் உட்பட 33 பேர் உயிரிழந்துள்ளனர்.