நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு இளைஞனை பொலிஸார் அதிவேக துரத்தலின் பின்னர் கைது செய்த சம்பவம் செக் குடியரசில் இடம் பெற்றுள்ளது.
ஹைவிரோவ் எனும் நகரில், பொலிஸ் நிலையமொன்றுக்கு முன்னால் ஒரு நபர் நிர்வாண நிலையில் மோட்டார் சைக்கிளில் செல்வதை அவதானித்த பொலிஸார் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
அந்நபரை பொலிஸார் துரத்திச் சென்றபோது அவர் மேலும் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்த ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அந்த மோட்டார் சைக்கிள் வாகனமொன்றின் மீது மோதி சரிந்தது. அதையடுத்து, மேற்படி நபர் அங்கிருந்து ஓடி மரமொன்றுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டார்.
எனினும், பொலிஸார் அவரை கண்டுபிடித்து கைது செய்தனர். 22 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் அவர் மது போதையில் இருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் 2 வருட கால சிறைத் தண்டனையை எதிர்நோக்குகிறார் என அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.







