தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய இருவரை குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் திகதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முதலமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விபரங்களை அப்பல்லோ மருத்துவமனை அவ்வவ்போது அறிக்கை மூலமாக தெரிவித்து வருகிறது.
எனினும், அவரது உடல்நிலை தொடர்பாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து அ.தி.மு.க தரப்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பேஸ்புக்கில் முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக, அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன் அளித்த முறைப்பாட்டின் பேரில் நாமக்கல்லை சேர்ந்த சதீஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ,நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜ்கமால் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மதுரையை சேர்ந்த மாடசாமி என்பவரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழச்சி என்பவர் மீதும் குற்றப்பிரிவு பொலிஸ் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





