முச்சக்கர வண்டியில் பயணிப்பவர்களா நீங்கள்? இதோ கவனியுங்கள்!!

256

auto

சமூகத்திலுள்ள அதிகமானவர்களினால் விரும்பப்பட்ட முச்சக்கர வண்டிப் பயணம் தற்காலத்தில் அதிகம் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றது. நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளின் எண்ணிக்கை தற்காலத்தில் அதிகரித்துள்ளது.

வீதிப் போக்குவரத்தில் நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது. நாளொன்றுக்கு 07 பேர் வீதம் விபத்துக்களின் மூலம் உயிரிழப்பதாகத் தெரியவந்துள்ளது.

விபத்துக்களில் அதிகமானவர்கள் உயிரிழப்பதுடன், காயத்துக்குள்ளாகி, அவயவங்களையும், உடைமைகளையும் இழந்து வருகின்றனர்.

விபத்துகள் வாழ்க்கையில் மாறாத வடுக்களையும், உளக் காயங்களையும் ஏற்படுத்துகின்றன. இதுகுறித்து விழிப்படைய வேண்டிய தேவையும், அவசியமும் சாரதிகளுக்கும், பயணிகளுக்கும் உண்டு.

சமூகத்திலுள்ள அதிகமானவர்களினால் விரும்பப்பட்ட முச்சக்கர வண்டிப் பயணம் தற்காலத்தில் அதிகம் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றது.

முச்சக்கர வண்டிப் பயணங்கள் இவ்வாறு மக்களினால் நம்பிக்கை இழக்கக் காரணம் என்ன என்பதை நாங்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வதுடன், அதனை நம்பிக்கைக்குரிய பயணமாகவும் மாற்ற முயற்சிக்க வேண்டும்.

குறைந்த செலவு, இலகு பயணம், நினைத்த மாத்திரத்தில் சேவையை பெற்றுக் கொள்ளக் கூடியதாயிருத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பெருமளவிலானவர்களினால் விரும்பப்படும் முச்சக்கர வண்டிப் பயணம் இன்று அதே மக்கள் மத்தியில் நம்பிக்கையிழந்து வருவதுடன், அதிகம் அச்ச நிலைமைகளையும் தோற்றுவித்துள்ளது என்றால் அதனை எவரும் மறுக்க மாட்டார்கள்.

முச்சக்கரவண்டிகள் அதிகம் சமூக விரோதச் செயற்பாடுகளுடன் தொடர்புபடுவதனால் மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளன.

அன்றாடம் நாட்டில் இடம்பெறும் விபத்து, கொலை, கொள்ளை, திருட்டு, கடத்தல், கப்பம், பாலியல் சேஷ்டை, பாலியல் வன்முறைச் சம்பவங்கள் போன்ற சம்பவங்களில் ஏராளமான முச்சக்கர வண்டிகளும், அதன் ஓட்டுனர்களும் அதிகம் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.

நாளொன்றுக்கு சுமார் 101 வீதி விபத்துக்கள் பதிவாகி வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

தினசரி இடம்பெறும் கோர விபத்துக்களில் முச்சக்கர வண்டிகள் அதிகம் சம்பந்தப்படுகின்றன.

அன்றாடம் இடம்பெறும் அதிகளவிலான குற்றச் செயல்களிலும் முச்சக்கர வண்டிகளும், அதன் சாரதிகளும் அதிகம் சம்பந்தப்படுகின்றனர் என்பதை பொலிஸ் மற்றும் ஊடகச் செய்திகள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.

ஏனைய வாகனச் சாரதிகள் ஓட்டுனர்களை விடவும் முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் தொடர்ந்தும் வித்தியாசமான அணுகுமுறைகளையே கடைப்பிடித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள போக்குவரத்துச் சட்டங்கள், போக்குவரத்து ஒழுங்கு விதிகளை முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் அல்லது அதன் சாரதிகள் அதிகம் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகின்றது.

நாடளாவிய ரீதியில் போக்குவரத்துப் பொலிஸார் கடமையில் இருந்து இவற்றை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்ற போதிலும், முச்சக்கர வண்டிச் சாரதிகளில் குறித்த சிலர் இவை குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாதவர்களாகவே தொழிற்படுகின்றனர்.

இதனால் அதிகம் விபத்துக்களையும், இழப்புக்களையும் எதிர்கொள்வது தெரிந்த செய்தி.

ஒரு சில முச்சக்கர வண்டி சாரதிகள் பணத்துக்காக குற்றச் செயல்களிலும் ஈடுபடுவதற்கு தயங்குவதில்லை.

தங்களது ஜீவனோபாயத்திற்காகவும், தொழிலுக்காகவும் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுபவர்கள் இவ்வாறான பெருங்குற்றச் செயல்களில் ஈடுபடுவதன் மூலம் ஏனையவர்களுக்கும் இழுக்கைப் பெற்றுக் கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபடுவது ஆரோக்கியமானதல்ல என்பதை உரியவர்கள் தெரிந்து கொண்டு எதிர்காலப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையிலீடுபடும் முச்சக்கர வண்டிகள், அலுவலக உத்தியோகத்தர்களின் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள், பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள், பொருட்களை கொண்டு செல்லும் முச்சக்கர வண்டிகள் எதுவாக இருந்தாலும் வித்தியாசம் வேறுபாடுகளின்றி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன என்பது சமூகத்தவர்களின் மதிப்பீடாகும்.

பாடசாலைக் கல்வி பெறுவதற்காக தனது பிள்ளை முச்சக்கர வண்டியில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலுள்ள பெற்றோர்களின் அதீத நம்பிக்கையை வீணடிக்கும் வகையில், சில முச்சக்கர வண்டி ஓட்டுனர்களின் இச்சைக்கு மாணவர்கள் இரையாகியுள்ள சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இது வேலியே பயிரை மேய்ந்த கதையாகும். மாத்திரமன்றி பணத்திற்காக வேறு தரப்பினருக்கும் இவ்வாறு மாணவர்களை இரையாக்கிய படுபாதகச் செயல்களில் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் அதிகம் ஈடுபட்டுள்ளமை கசப்பான உண்மையாகும்.

ஆண் உதவியில்லாத பெண்கள், கணவன் வெளிநாட்டில் தொழில் புரியும் நிலையில் தனியாக வாழும் குடும்பப் பெண்கள், அலுவலகங்கள் மற்றும் அவசர தேவையின் நிமித்தம் பயணிக்கும் பெண்கள், யுவதிகள் என தனியாகப் பயணிக்கும் பெண்களிடமும் இவர்கள் தங்களது சேஷ்டைகள், பாலியல் குற்றங்களை கட்டவிழ்த்து விடுகின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட முச்சக்கர வண்டி ஓட்டுனர்களும் கூட்டாக இணைந்து இவ்வாறான பாதகச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் பெண்களின் தனிப்பட்ட விபரங்கள், தொலைபேசி இலக்கங்களை பெற்று, பின்னர் தொடர்பினை ஏற்படுத்துதல், இரட்டை அர்த்தத்தில் பேச்சுத் தொடுத்தல், தேவையின்றி அவர்களது வீட்டுக்குச் செல்லுதல் போன்ற தரக்குறைவான செயல்களிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றமை தெளிவாகும்.

இவ்வாறான சம்பங்களின் போது பொதுமக்கள், சிவில் பாதுகாப்புக் குழுவினர் மற்றும் பொலிஸாரிடம் அகப்பட்ட சம்பவங்களும் அதிகம் பதிவாகியுள்ளன.