தெற்கில் காலி கராப்பிட்டியவில் சிறுவர்களுக்கான புற்றுநோய் சிச்சை பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி வடக்கில் பருத்தித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு இன்று காலை வவுனியா புளியங்குளம் புரட்சி விளையாட்டு மைதானத்தை இன்று காலை 9.30 மணியளவில் வந்தடைந்தது .
சுமார் 5 மில்லியன் நிதியினை திரட்டும் நோக்கில் வடக்கில் இருந்து தெற்கிற்கு 28 தினங்களாக பயணிக்கவுள்ள இந்த நடைபவனி கடந்த (06.10.2016 )வியாழக்கிழமை யாழ். பருத்தித்துறையில் இருந்து ஆரம்பிக்கபட்டிருந்தது.
ஒரு நாளில் சுமார் 20 தொடக்கம் 30 கிலோமீற்றர் தூரத்தை கடக்கவுள்ள இவ் நடைபவனியானது பருத்தித்துறையில் இருந்து கொடிகாமம், மாங்குளம், வவுனியா மதவாச்சி, கல்முனை, குருணாகல், கொச்சிக்கடை, கொழும்பு, பாணாந்துறை மற்றும் சீனிகம போன்ற நகரங்களை கடக்கவுள்ளது.
இன்றுகாலை வவுனியா புளியங்குளத்தை வந்தடைந்த இந்த நடை பவனியை பொதுமக்கள் மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் அனுசரணையாளர்கள் எனப்பல்வேறு தரப்பினரும் வரவேற்று தங்களாலான நன்கொடைகளை வழங்கியதோடு நடை பவனியில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு மற்றும் பழங்களையும் வழங்கியிருந்தனர் .நாளைய தினம் இந்த நடை பவனி வவுனியாவை நோக்கி செல்கிறது.



















