சிரஞ்சீவியின் பேச்சால் ராம்சரண் படத்தை திரையிட எதிர்ப்பு!!

541

ramsaran

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய மந்திரி சிரஞ்சீவி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தெலுங்கானா எதிர்ப்பு போராட்டக்காரர்கள் கேட்டுக் கொண்டும் அவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அதோடு ஐதராபாத் நகரை யூனியன் பிரதேசமாக மாற்றினால் ஆந்திரா மக்கள் போராட்டம் முடிவுக்கு வந்து விடும் என்று மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்தார்.

சிரஞ்சீவியின் பேச்சு சீமாந்திரா மற்றும் தெலுங்கானா பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரது குடும்ப உறுப்பினர்கள் படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தனர். சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா–பிரியங்கா சோப்ரா நடித்த துபான் படம் முடிவடைந்து விட்டது. இதே படம் இந்தியில் சம்ஜீர் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இந்த படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் காரணமாக ரிலீஸ் திகதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு மாநிலம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. ஆனால் படத்தை திரையிட போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

படத்தின் சுவரொட்டிகளை கிழித்து தீவைத்து எரித்தனர். திருப்பதி, நெல்லூர், அனந்தபுரம், கர்னூல் ஆகிய நகரங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தது. எதிர்ப்பை மீறி திரையிட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று தியேட்டர் அதிபர்களுக்கு மிரட்டல் விடுத்தனர்.

இதேபோல் ஐதராபாத் பற்றி சிரஞ்சீவி அறிவித்த யோசனையால் தெலுங்கானா பகுதியிலும் ராம் சரண் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. அங்கும் அவரது பட போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டது. இதனால் ராம்சரண் தேஜா படம் இன்று ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி படதயாரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் பிக் எண்டர்டெய்மெண்ட்ஸ் பிரைவேட் நிறுவனம் ஐதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. படம் வெளியாவதில் தடை ஏற்பட்டால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும். எனவே படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.