சென்னையில் கிண்டி- கத்திபாரா சாலையில் நேற்று நடந்த தண்ணீர் லொறி விபத்தில் மூன்று மாணவிகள் பரிதாபமாக பலியாகினர்.
செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சித்ரா, ஆயிஷா மற்றும் காயத்திரி ஆகிய மூன்று பேரும் சாலையை கடக்கும் போது பரிதாபமாக பலியாயினர்.
திருவொற்றியூர் ராஜாஜி நகரை சேர்ந்த சித்ரா, புளியந்தோப்பு நரசிம்மன் நகரை சேர்ந்த ஆஷா ஸ்ருதி இருவரும் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர்.
போரூர் ஆலப்பாக்கம் திருமுருகன் நகரைச் சேர்ந்தவர் காயத்திரி, இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
மூன்று பேருமே ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவர்கள், நொடிப்பொழுதில் இவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது பிரேத பரிசோதனை இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
கல்லூரி மாணவிகள் ராஜப்பேட்டை மருத்துவமனைக்கு திரண்டு வந்து கதறி அழுதனர், சிலர் மயக்கம்போட்டு விழுந்தனர்.
அப்போது மருத்துவமனை ஊழியர்களும், வழக்குப் பதிவு செய்துள்ள கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு பொலிஸாரும் பலியான மாணவிகளின் பெயரை தனித்தனியாக குறிப்பிட்டு அடையாளம் காட்டும்படி அழைத்தனர்.
அப்போது உள்ளே சென்ற மாணவிகள் சடலமாக கிடந்த மாணவிகளின் சிதைந்த உடலை பார்த்து கூச்சலிட்டனர், சிலர் வெளியே வந்து மயங்கி விழுந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்தும் கட்டுப்படுத்த முடியவில்லை.
சித்ராவின் உறவினர் கூறுகையில், கூலி வேலை செய்தே சித்ராவை படிக்க வைத்தனர். சித்ராவுக்கு செல்போன் கூட கிடையாது, அரசு அதிகாரியாக வேண்டும் என்பதே அவருடைய கனவு.
நான் சம்பாதித்து உங்கள் அனைவரையும் பார்த்துக் கொள்கிறேன் என எப்போதும் கூறிக் கொண்டே இருப்பார், இவரை சடலமாக பார்ப்போம் என கனவிலும் நினைத்து பார்க்கவில்லை என கண்ணீருடன் கூறியுள்ளார்.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லொறி ஓட்டுநர் ராஜேந்திரனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ராஜேந்திரன் வாக்குமூலம் அளித்ததாக பொலிசார் கூறுகையில், கிண்டியிலிருந்து சைதாப்பேட்டை நோக்கி தண்ணீர் லொறியை ஓட்டிச் சென்றேன்.
பாலத்தில் இருந்து இறங்கியதும் லொறி திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் என்ன செய்வதென்று தெரியவில்லை.
கியர் லொக் போட்டும் லொறி நிற்கவில்லை, வலதுபுறம் திருப்பினால் அதிகளவில் சேதம் ஏற்படும் என நினைத்தேன்.
எனவே தான் இடதுபுறம் திருப்பினேன், மாணவிகள் ஓடிவிடுவார்கள் என நினைத்தேன், ஆனால் விபரீதமாகி போனது என தெரிவித்துள்ளனர்.








